தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் கல்லூரி நிறுவனர் தின விழாவினை முன்னிட்டு இந்திய விண்வெளி திட்டங்கள் குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் திரவ இயக்க திட்ட மையத்தின் இயக்குனர், முனைவர் வி.நாராயணன் Distinguished Scientist (APEX Grade), 'இந்திய விண்வெளி திட்டங்கள்: நேற்று, இன்று, நாளை' என்ற தலைப்பில் நிறுவனர் தின சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.மேலும், பெங்களூரு, இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் ஆண்டெனா சிஸ்டம்ஸ் பிரிவு தலைவரும், நேஷனல் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவருமான வி.செந்தில் குமார் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில், கல்வித்தந்தை உயர்திரு கே.ஆர்.ராமசாமி நினைவு தகுதிசார் கல்வி உதவித்தொகை நடப்பு கல்வியாண்டில் கே.ஆர்.கல்வி நிறுவனங்களில் பயிலும் 28 மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.




இதனை தொடர்ந்து திருவனந்தபுரம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் திரவ இயக்க திட்ட மையத்தின் இயக்குநர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சந்திரயான் - 3 திட்டம் என்பது 100 சதவீதம் வெற்றிகரமான திட்டம். இந்த திட்டம் இந்தியர்களை ஒருமைப்படுத்திய ஒரு திட்டம். 2047இல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும். அதற்கு இது தான் முதல் படி. சந்திரயான் -3 திட்டம் இந்தியர்களில் பெருமை சேர்த்த திட்டம். கடந்த 2ஆம் தேதி லேண்டரில் உள்ள இயந்திரத்தை இயக்கி, 40 மீட்டர் மேலே உயர்த்தி வேறொரு பீடத்தில் வைத்துள்ளது. வருங்காலத்தில் தாது பொருட்களை எடுத்து வருவதற்கு இது பயன்படும். இது ஒரு வெற்றிகரமான செயல். சுதந்திரத்துக்கு பின்னர் இந்தியா 1967ஆம் ஆண்டு தான் ராக்கெட் அனுப்பியது. இதனால் மற்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட முடியாது. இந்த 60 ஆண்டுகளில் இந்தியா செய்தது உலகமகா சாதனையாகும். இவையனைத்தும் இந்தியா மக்களுக்கு நன்மைபயக்கும் ஒரு திட்டம். சந்திரயான்- 3 நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கியதில் முதல் இடத்தில் உள்ளோம். முதன் முதலாக கடந்த 2008இல் சந்திரயான் -1 திட்டத்தில் நிலாவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தோம்.இவையனைத்திலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா முதன் முறையிலேயே வெற்றி பெற்றுள்ளது. அதிலும், இந்தியா குறைந்த செலவில் ராக்கெட் ஏவி உள்ளது.




நிலாவில் மனிதர்கள் குடியேற வாய்ப்பு உள்ளது என நம்புகிறேன். இதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. ஆதித்தியா எல் - 1 என்ற செயற்கைக்கோள் சூரியனை ஆராய்ச்சி செய்ய அனுப்பி உள்ளோம். இந்த செயற்கைக்கோள் 1480 கிலோ எடை கொண்டது. இதில், 7 விஞ்ஞான கருவிகள் உள்ளன. இதனை கடந்த 2ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. - 57 வாகனத்தில் நீள்வட்ட பாதைக்கு அனுப்பினோம். அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி, ஒரு லட்சத்து 22 ஆயிரம் கி.மீ. கொண்டு சென்றுள்ளோம். வரும் 19ஆம் தேதி காலையில் அங்கிருந்து சூரியனை நோக்கி அனுப்ப உள்ளோம். உலகத்தில் சூரியனை ஆராய்ச்சி செய்ய செயற்கைக்கோள் அனுப்பியுள்ள 4ஆவது நாடு இந்தியா. அடுத்த மாதம் ககன்யான் திட்டத்தில் மனிதர்களை அனுப்பும் திட்டமும் உள்ளது என்றார் பேட்டியின் போது, நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முகவேல், கல்லூரி முதல்வர் கே.காளிதாசமுருகவேல் ஆகியோர் உடனிருந்தனர்.