தூத்துக்குடியில் விற்பனையாகாமல் 5 ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் மலேசிய மணலை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய அரசு முன்வருமா பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மணல் குவாரிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கட்டுமான பணிகளுக்கு மணல் இல்லாமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மலேசியாவில் இருந்து 55,445 தன் மணலை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு கொண்டு வந்தது தொடர்ந்து இந்த மணலை அந்த நிறுவனம் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது.




ஆனால், தனியார் நேரடியாக மணல் விற்பனை செய்ய தமிழக அரசு தடைவிதித்து இருந்தது. மேலும் மணல் விற்பனையை அரசை ஏற்று நடத்தும் என்று அரசாணையும் வெளியிட்டது. இதனை எதிர்த்து மணல் இறக்குமதி செய்த தனியார் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு மணலுக்காக ரூ.12 கோடியை தனியார் நிறுவனத்திற்கு நீதிமன்றம் மூலம் வழங்கியது. பின்னர் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை அரசே விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தது. அதன்படி தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய மணல் விற்பனைக்கான ஆன்லைன் முன்பதிவை கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி துவங்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு யூனிட் சுமார் 4.5 டன் மணல் ரூ 9990க்கு விற்பனை செய்யப்பட்டது.




ஆனாலும், மலேசிய மணலை ஒரு சிலர் மட்டுமே வாங்கி சென்றனர். மணலுக்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டதாக கூறி இந்த மணலை வாங்க ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில் எம்.சாண்ட் விற்பனையும் அதிகரித்ததால் இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய மணலின் மீது இருந்த கட்டுமான நிறுவனங்களின் பார்வை எம்.சாண்ட் பக்கம் திரும்பியது. இதனால் மலேசிய மணலை வாங்க யாரும் முன் வரவில்லை




தூத்துக்குடி வ உ சிதம்பரனார் துறைமுகம் வளாகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையாகாமல் உள்ள மலேசிய மணல் தேங்கி கிடப்பதால் செடி கொடிகளால் சூழப்பட்டுள்ளது. துறைமுகப் பகுதியில் மணல் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால் துறைமுகத்துக்கு வாடகைத் தொகையும் பல லட்சம் செலுத்த வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், ரூ.12 கோடி கொடுத்து வாங்கிய மலேசிய மணல் எந்தவித பயனும் இல்லாமல் வீணாக மலையிலும் காற்றிலும் கரைந்து போகும் நிலை உள்ளது.


இதுகுறித்து கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கூறும் போது, “கட்டுமான தொழிலுக்கு மிகவும் முக்கியமானது மணல் ஆனாலும் தற்போதும் ஆற்று மணலுக்கான தட்டுப்பாடு நீடித்தே வருகிறது. ஆற்று மணல் தட்டுப்பாட்டை தற்போது எம்சாண்ட் பூர்த்தி செய்து வருகிறது. ஆனாலும் கூட தூத்துக்குடி துறைமுகத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள மலேசிய மணல் தரம் குறித்த சந்தேகங்களை அரசு நிவர்த்தி செய்து மணலின் விலையை குறைத்து விற்பனை செய்ய முன்வர வேண்டும். இல்லையெனில் அரசு கட்டுமான பணிகளுக்காவது இந்த மணலை பயன்படுத்த வேண்டும்” என்கின்றனர்.