தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே ஒரு போக்குவரத்து காவல் ஆய்வாளர் மட்டுமே உள்ளார். இதனால் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து பிரச்சினைகளை சமாளிப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூரில் ஆய்வாளர்கள் தலைமையில் நிரந்தரமாக போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, ஆன்மீகம், சுற்றுலாவில் முக்கிய மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது. இதனால் இம்மாவட்டத்தில் போக்குவரத்து பிரச்சினைகளும் அதிகம். ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மத்திய பாகம், தூத்துக்குடி தென் பாகம் ஆகிய இரண்டு போக்குவரத்து காவல் நிலையங்கள் மட்டுமே முழுமையாக செயல்பட்டு வருகின்றன.
இந்த இரண்டுக்கும் சேர்த்து ஒரு காவல் ஆய்வாளர் மட்டுமே உள்ளார். மேலும், 2 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள், 40 போக்குவரத்து போலீஸார் பணியில் உள்ளனர். இதனை தவிர கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூரில் தனியாக உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போக்குவரத்து காவல் பிரிவு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அரசாணைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட முழுமையான நிரந்தர போக்குவரத்து காவல் நிலையங்கள் இங்கே இல்லை. திருச்செந்தூரில் 5 போக்குவரத்து போலீஸாரும், கோவில்பட்டியில் 11 போக்குவரத்து போலீஸாரும் பணியில் உள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 33 ஆயிரத்து 414 கார்களும், 42 ஆயிரத்து 317 இருச்சக்கர வாகனங்களும் உள்ளதாக வட்டார போக்குவரத்து கழகத்தில் தகவல் தெரிவிக்கின்றது. மாவட்டம் முழுவதும் போக்குவரத்து சார்ந்த பிரச்சினைகளை ஒரே ஒரு ஆய்வாளர் கவனித்து வருகிறார். இதனால் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆன்மீகத் தலமான திருச்செந்தூருக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் கந்த சஷ்டி, ஆவணி திருவிழா, மாசித் திருவிழா போன்ற முக்கிய விழாக்களின் போது ஒரே நேரத்தில் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.
குலசேகரன்பட்டினத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். இந்த நாட்களிலும் தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தான் அங்கு சென்று போக்குவரத்து பிரச்சினைகளை கவனிக்க வேண்டியுள்ளது. வளர்ந்து வரும் தொழில் நகரமான கோவில்பட்டி மிகவும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகரமாகும். இங்குள்ள செண்பகவல்லி அம்மன் கோயில் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். அந்த நேரங்களிலும் தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தான் அங்கு சென்று கவனிக்க வேண்டும்.
கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூரில் ஆய்வாளர்கள் தலைமையில் தலா 20 போக்குவரத்து காவலர்களை கொண்ட முழுமையான நிரந்தர போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை. தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. எனவே, இந்த பகுதியில் போக்குவரத்து பிரச்சினைகளை கவனிக்க துறைமுகப் பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனியாக போக்குவரத்து காவல் நிலையம் ஒன்று அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறிய மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட 4 போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் பணியில் உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 6 போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் உள்ளனர். ஆனால், பெரிய மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே ஒரு காவல் ஆய்வாளர் இருப்பதால் போக்குவரத்து பிரச்சினைகளை தீர்ப்பதில் சிரமம் நிலவுகிறது. இது குறித்து விசாரித்த போது தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதலாக இரு போக்குவரத்து காவல் நிலையங்கள் தேவை என்பது குறித்து கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் தூத்துக்குடி மாநகரில் கூடுதலாக போக்குவரத்து காவல் நிலையம் தேவை என்பதே நிதர்சனமான கோரிக்கையாக உள்ளது.