நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு வந்தவர்களில் பல்லை பிடுங்கி விசாரணை மேற்கொண்ட விவகாரத்தில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விசாரணை மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்தநிலையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது அலுவலகத்தில், நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,


”இந்த விவகாரத்தில் சட்டப்பேரவையில் பேசி அதன் மூலம் முதல்வர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். பணியிடை நீக்கம் மட்டும் இதற்கு நிரந்தர தீர்வு அல்ல. பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலையை சரி செய்ய வேண்டும், முதலில் அதற்கான பரிசோதனையை செய்ய வேண்டும். இன்று வரை அது நடக்கவில்லை என்பது வருந்தத்தக்க ஒரு செயலாக பார்க்கிறேன், குற்றம் செய்தவர்களை எப்படி தண்டிக்க வேண்டும், எப்படி விசாரணை செய்ய வேண்டும் என சட்டத்தில் இடம் இருக்கிறது.  மேலும் முதலில் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலையை சரிசெய்து அவர்களுக்கான நிவாரணம் வழங்க வேண்டும். பின் அவரை கைது செய்வதா? அவர் மீது விசாரணை செய்வதா என்பதெல்லாம் இரண்டாவதாக செய்ய வேண்டும். சிலருக்கு இன்று வரை எந்த  ஒரு பரிசோதனையும் செய்யப்படவில்லை. அதனால் அம்பாசமுத்திரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர்களின் உடல் பரிசோதனை செய்வதற்கான வேலையை செய்ய போகிறேன்” என்றார்.


தொடர்ந்து பேசிய அவர் ”இந்த விசாரணை சரியாக செல்கிறதா? இல்லையா? என பார்த்தால் கண்டிப்பாக  இந்த  விசாரணை சரியான  விதத்தில் தான் செல்லும் என நான் நினைக்கிறேன்.  ஒரு சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் செய்கின்றனர். அதன் முழு விவரம் தெரியாமல் தான் தோன்றி தனமாக  பதில் கூற முடியாது. அதனுடைய முடிவை பர்த்துவிட்டு தான் சொல்ல முடியுமே தவிர எடுத்தவுடனே அது சரியாக போகவில்லை என்று சொல்வதற்கும். சரியாக போகிறது என்பதற்கும் ஆதாரம் இல்லை” என்று தெரிவித்தார். 


”ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பொறுத்தவரையில் அவர் குற்றவாளிகளை கையில் எடுத்த விதம் தவறே தவிர, அவர் சட்டத்தை சரியாக கொண்டு வர வேண்டும் என இதை செய்தாரா அல்லது காழ்ப்புணர்ச்சியில் செய்தாரா என கேட்டால், ஒரு ஆள் மீது காழ்ப்புணர்ச்சி இருக்கலாம். ஆனால் 20 பேர் மீது காழ்ப்புணர்ச்சி என எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கான விசாரணைதான் போய்க்கொண்டு இருக்கிறது.  தீர்ப்பு வந்த பிறகே நமக்கு தெரியும் என்றார். இந்த விவகாரத்தை அரசியல் செய்வதற்கோ, தனிப்பட்ட விரோதமாக பார்ப்பதோ தேவையில்லை” என்றார்.