தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஸ்டோர் ரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பள்ளி சீருடை மற்றும் ஸ்கூல் பேக் எரிந்து கருகியது. தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என இரண்டு பேர் பணிபுரிந்து வருகிறனர்.
இங்கு 16 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் பழைய கட்டிடம் ஸ்டோர் ரூமாக பயன்படுத்தி வருகின்றனர். இதில், கருங்குளம் வட்டாரத்தில் உள்ள துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஸ்கூல் பேக் மற்றும் பள்ளி சீருடைகளை மொத்தமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலையில் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்புவதற்காக மோட்டார் சுவிட்ச்சை போட்டுள்ளனர். சிறிது நேரத்தில் சுவிட்ச் போர்டில் தீ விபத்து ஏற்பட்டு ஸ்டோர் ரூம் முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. ஸ்டோர் ரூம் ஓடு கட்டிடம் என்பதால் தீ வேகமாக பரவியதில் வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள சீருடைகள் மற்றும் ஸ்கூல் பேக்குகள் எரிந்து நாசம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவைகுண்டம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட போது மாணவ, மாணவிகள் யாரும் பள்ளிக்கு வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த 3800 ஸ்கூல் பேக்குகள், 7300 பள்ளி சீருடைகள், ஆயிரக்கணக்கில் நோட் மற்றும் புத்தகங்கள் எரிந்தது.
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஸ்டோர் ரூமில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கூறும்போது, அரசு பள்ளிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தாலும் கிராமப்புற பள்ளிகளில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர்.