தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பஸ் மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்த லட்சுமணப் பெருமாள் மகன் கீர்த்திக்(23). இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இன்று மாலை கல்லூரி முடித்து கீர்த்திக் தனது கல்லூரி நண்பர்களான கோவில்பட்டி அருகே வானரமுட்டியை அடுத்த வெயிலுகந்தபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் மகன் செந்தில்குமார் (24), கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் மேலதெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் அஜய் (23), கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 1வது தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் அருண்குமார் (21), விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விக்னேஷ் (23) ஆகியோருடன் கோவில்பட்டிக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
இளையரசனேந்தல் சாலையில் தனியார் கல்லூரி அருகில் உள்ள பாலத்தில் வந்த போது எதிரே வந்த தனியார் பஸ் - கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கீர்த்திக், செந்தில் குமார், அஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருண்குமார், விக்னேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், உதவி ஆய்வாளர் அரிக் கண்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு துறையினர் வீரர்கள் உதவியுடன் இடிப்பாடுகளின் சிக்கி இருந்த 3 பேரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் தனியார் பேருந்தில் வந்து காயமடைந்த தனியார் கல்லூரி தோட்ட தொழிலாளி பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த மாடசாமி (62) என்பவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாத்தூரை சேர்ந்த விக்னேஷ் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். விபத்தில் நான்கு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கோவில்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.