தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. புதூர் வட்டாரத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிறு வகைகள், மக்காச்சோளம், கொத்தமல்லி போன்ற பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது. கதிர் அறுவடை செய்யப்பட்ட பின் விவசாயிகள் தட்டையை கழற்கலப்பை மூலம் உழவு செய்வது உழவு செய்வது வழக்கம்.




மக்காச்சோளப் பயிர்கள் நீண்ட நாள் பயிர் என்பதால் அனைத்து மகசூலையும் அறுவடை செய்தபின்னர், கடைசியாக மக்காச்சோளம் அறுவடை செய்யப்படுகிறது.தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால் தட்டை காய்ந்த நிலையில் காணப்படுகிறது .இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புதூரில் இருந்து கீழே அருணாசலபுரம் செல்லும் சாலையில் மக்காச்சோளம் அறுவடை நடைபெற்று வருகிறது. இதில் அங்குள்ள ஒரு ஏக்கரில் சுமார் 75 சதவீதம் அறுவடை நடைபெற்ற முடிந்த நிலையில் அப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து உள்ளனர். இதனால் காய்ந்த தட்டைகளுடன் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோள பயிர்களும் தீயில் கருகி எரிந்தது.விவசாயிகள் உடனடியாக டிராக்டர் மூலம் தீயை அருகில் உள்ள நிலங்களுக்கு பரவாத வகையில் தடுக்க தீப்பற்றி எரிந்த பகுதியை சுற்றி கலப்பை மூலம் குழி தோண்டினர், இதனால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.




மேலும்  அருகே உள்ள நீர் நிலைகளில் இருந்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர். தீயில் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோள பயிர்களும் எரிந்து கருகி உள்ளது. ஏற்கனவே பருவம் சவாரி பெய்த மழையால் மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் அதிகமாக இருந்தது.மேலும் பாசி,உளுந்து மற்றும் கொத்தமல்லி பயிர்கள் கடுமையாக பாதிப்படைந்து பாதி அளவு கூட மகசூல் கிடைக்கவில்லை இந்நிலையில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் கிடைக்க வேண்டிய மகசூழும் பாதிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் விவசாயிகள்.




இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும்போது, “சாலையோரம் செல்வோர்கள் புகைப்பிடித்து விட்டு நிலங்களில் வீசி சென்று விடுகின்றனர். இதனால் காய்ந்த தட்டைகளில் பற்றி அறுவடை செய்யப்படாத இடங்களிலும் உள்ள பயிர்களும் பாதிக்கப்படுகின்றன. ஏற்கனவே நிலங்களில் உள்ள காய்ந்த தட்டைகளை தீ வைத்து எரிக்க கூடாது.அப்படி செய்தால் மண்ணுக்கு அடியில் உள்ள பயிர்களுக்கு நன்மை தரக்கூடிய மண்புழுக்கள் அழிந்துவிடும். அடுத்த முறை பயிர் செய்யும்போது பயிர்களை நோய்கள் எளிதாக தாக்கும் பின் மீண்டும் நிலத்தில் மண்புழு வளர்ப்பு செய்ய முடியாது என வேளாண் துறையினர் பல்வேறு முறை அறிவுறுத்தி உள்ளனர். இதனால் நாங்கள் நிலங்களுக்கு தீ வைப்பது கிடையாது. எனவே விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கின்றனர்.