ஸ்ரீவைகுண்டம் அருகே இறந்தவர் சடலத்தை வயல்வெளியில் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுமந்து செல்லும் பொதுமக்கள். இறந்தவர் சடலத்தை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வயல்வெளி வழியாக கொண்டு சென்ற சம்பவத்தில் உதவி ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது மணக்கரை கீழுர். இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ளவர்களில் ஒருவர் இறந்தால் இறந்தவரை கொண்டு செல்வதற்கு பாதை இல்லாமல் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இதற்காக இறந்தவரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த பகுதியைச் சேர்ந்த மூக்கன் என்பவர் கடந்த 11ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது ஊர் வழியாக கொண்டு செல்ல அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதால் இறந்தவர் உடலை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வயல்வெளியில் சுமந்து சென்ற அவல நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திடமும், வருவாய்த்துறையினரிடமும் மனுஅளித்தும் பயனில்லை என்று கூறும் அப்பகுதி மக்கள் தங்களுக்கு நிரந்தரமாக ஒரு பாதை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து தூத்துக்குடி உதவி ஆட்சியர் கௌரவ் குமார் நேரில் பாதிக்கப்பட்டோர் பகுதிகளிலும், மயானத்திற்கு செல்லும் பாதைகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர் அப்பகுதி பொதுமக்கள் அனைவரையும் அழைத்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலத்தில் உதவி ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையில் சமாதான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அங்கு இதுகுறித்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்