கொட்டும் மழையில் தகர கொட்டகை அமைத்து உடலை எரித்த மக்கள். சுற்றுச்சுவர், தகன மேடை அமைத்து தர பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து நடவடிக்கை இல்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி இந்திரகாலனி பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டிற்கு சுற்றுசுவர், தகன மேடை இல்லை என்பதால் திறந்த வெளியில் சடலத்தினை எரிக்கும் நிலை உள்ளது. திடீரென மழை பெய்ததால் தகர கொட்டகை அமைத்து உயிரிழந்தவரின் உடலை எரிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்டது இந்திரகாலனி. இங்கு ஒரு சமூகத்தினை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு இனாம்மணியாச்சி ஊருக்குள் செல்லக்கூடிய முகப்பில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு திறந்த வெளியில் இருப்பதால் கடந்த 40 ஆண்டுகளுக்க மேலாக திறந்த வெளியில் தான் உயிரிழந்து வரும் சடலங்களை புதைப்பது அல்லது எரியூட்டும் நிலை உள்ளது.




சுடுகாட்டினை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், தகனமேடை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் தற்பொழுது வரை நடவடிக்கை இல்லை. இதனால் திறந்த வெளியில் சடலத்தினை எரியூட்டும் போது அப்பகுதி வழியாக பொது மக்கள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் சடலங்களை எரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் சுடுகாடு பகுதியில் எவ்வித பாதைகளும் சரியாக இல்லை என்பதால் மிகுந்த சிரமத்துடன் தான் சடலத்தினை கொண்டு செல்லும் நிலை உள்ளது.




இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கற்பூர ராஜ் என்பவர் உயிரிழந்து விட்டார். அவரது உடலை எரியூட்ட அப்பகுதி மக்கள் கொண்டு வந்த போது திடீரென மழை பெய்ததால் வேறு வழியின்றி தகரங்களை வைத்து கொட்டகை அமைத்து எரியூட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து நடவடிக்கை இல்லை, ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தால் தனக்கு ஓட்டுப்போடவில்லை என்று கூறி செய்ய மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். இனியாவது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.