தூத்துக்குடி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

 

காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மழைக்கால நோய்களும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் சராசரியாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 200 பேர் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதேபோல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தினமும் 50 பேர் வரை வந்து காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.



 

தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதே போல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் உள் நோயாளிகளாகவும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சிவக்குமார் கூறும்போது,  பருவநிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.

 

குழந்தைகளுக்கு தனியாக காய்ச்சல் வார்டு மற்றும் ஒரு பொது காய்ச்சல் வார்டு, ஒரு தீவிர சிகிச்சை காய்ச்சல் வார்டு ஆகிய மூன்று சிறப்பு வார்டுகள் காய்ச்சல் பாதித்தவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள், மருந்து மாத்திரைகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது.



 

நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளுடன் நிலவேம்பு குடிநீர், கீரை சூப், பருப்பு சூப் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. மழைக் காலத்தில் ஏற்படும் வைரஸ் காய்ச்சல் தான் தற்போது ஏற்பட்டு வருகிறது. காய்ச்சல் ஏற்பட்ட உடனே பராசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

 

தொடர் காய்ச்சல் இருந்தாலோ, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டாலோ உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கஞ்சி, பால், பருப்பு சூப், கீரை சூப், ஓஆர்எஸ் கரைசல் போன்ற திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றார்.