தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் இயற்கை உரம் என்று கூறி விவசாயிகளிடையே களிமண்ணை விற்பனை செய்த கும்பலால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Continues below advertisement




தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் புரட்டாசி ராபி பருவத்திற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். அடி உரமான டிஏபி கடந்த காலங்களில் பெரும் தட்டுப்பாடு காரணமாக கிடைக்காமல் மிகவும் விவசாயிகள் சிரமப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு அரசுக்கு விவசாயிகள் முன்கூட்டியே அடி உரம் டிஏபி அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த வாரம் சில கூட்டுறவு சங்கங்களுக்கு மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு டிஏபி வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட டிஏபி தட்டுப்பாடு போல் இந்தாண்டும் ஆகிவிடுமோ என அச்சத்தில் இருந்தனர்.




இந்நிலையில் கடந்த 20 நாட்களாக கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், புதூர் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் தஞ்சாவூர், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து சிலர் டிஏபி உரத்திற்கு இணையாக இயற்கை கடல் பாசி உரம் என்ற பெயரில் நல்ல பலனை தரக்கூடிய உரங்கள் எங்களிடம் உள்ளது, 50 கிலோ கொண்ட மூட்டை ரூ 1300 எனக் கூறி ஒரு கும்பல் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் அந்த உர மூட்டைகளை அவிழ்த்து பார்த்த போது வெறும் களிமண் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதனை பரிசோதனை செய்து பார்த்தபோது அது வெறும் களிமண் மட்டுமே இருக்கிறது என்ற விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.




ஒவ்வொரு விவசாயியும் 5 முதல் 20 உர மூட்டைகளை அந்த கும்பலிடம் இருந்து வாங்கி உள்ளனர். தற்போது அது போலியான உரம் என்று தெரிய வந்ததை தொடர்ந்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். போதிய உரம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இதுபோன்ற உரங்களை வாங்கி தாங்கள் ஏமாந்து போய் உள்ளதாகவும், அரசு போதிய உரங்களை வழங்க நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, தங்களுடைய பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஒவ்வொரு விவசாயியும் ஐந்தாயிரம் முதல் 40000 வரை போலியான உரங்களை வாங்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.




இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறுகையில், கடந்த சில ஆண்டுகள் ஏற்பட்ட உரத்தட்டுப்பாடு தான் காரணம் என்றும், இயற்கை உரம் என்று கூறி களிமண்ணை கொடுத்து ஏமாற்றி சென்றுள்ளதாகவும், எவ்வித அரசு சான்றிதழ் இல்லாமல் அந்த கும்பல் விவசாயிகளிடம் விற்பனை செய்து உள்ளதாகவும், உரத் தட்டுப்பாடு போக்க அரசு நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி இது போன்ற கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.




இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் முகைதீன் கூறுகையில், இது தொடர்பான புகார் தங்களுக்கு வந்ததாகவும், ஓட்டப்பிடாரம் பகுதியில் அதிகளவு கொடுத்துள்ளதாக வரும், சில விவசாயிகள் தாங்கள் வாங்கவில்லை என்று கூறுகின்றனர். இருந்த போதிலும் விசாரணை நடத்தி தஞ்சாவூர் பகுதியில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. அங்குள்ள வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வெறும் 30 மூடைகள் தான் விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளதாகவும், அந்த கும்பல் இயற்கை உரம் என்றாலும் விவசாயிகள் இது போன்ற உரங்களை வாங்க கூடாது. இது போன்ற உரங்களை விற்க அரசு எவ்விதச் சான்றிதழ் வழங்கவில்லை, முறைகேடாக தான் இது போன்ற விற்பனை செய்து வருவதாகவும், இது போன்ற உரங்களை வாங்க கூடாது என்பது விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.


இந்நிலையில், வேளாண்துறை, அங்க உர விற்பனையில் ஈடுபட்ட நிறுவனம் உரம் மற்றும் பூச்சி மருந்தினை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் அதில் சம்பந்தப்பட்ட ஸ்பிக் நிறுவன லோகோவை போலியாக பயன்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.