நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால் 4 மாவட்டங்களும் பெரிதளவில் வெள்ளப்பாதிப்பிற்கு ஆளானது. குறிப்பாக வீடுகள், சாலை, தெருக்கள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது, பல்வேறு இடங்களில் மழை நீரில் வீடுகள் சேதமானது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. வெள்ளம் புகுந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாமல் பலர் மாடிகளில் தஞ்சை அடைந்தனர். குறிப்பாக நெல்லை மாநகர பகுதியான நெல்லை சந்திப்பு, டவுண் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் கட்டிடங்களை மூழ்கடிக்கும் அளவிற்கு சூழந்தது. அதே போல தாமிரபரணி ஆற்றங்கரையோர வீடுகள் முழுவதுமாக நீரில் மூழ்கியது. ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பலரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து வெளியேற்றி முகாம்களில் பத்திரமாக தங்க வைத்தனர். இந்த நிலையில் நேற்று மதியத்திற்கு மேல் மழை படிப்படியாக குறைந்தது. இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடியத் தொடங்கியது. அதோடு போக்குவரத்தும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இச்சூழலில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் தங்கி உள்ள மீனவ மக்களை இன்று நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். குறிப்பாக மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களை மீட்பதற்காக உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, கூட்டப்புளி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சின்னமுட்டம், தூத்தூர் ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து 72 பைபர் படகுகளுடன் 400 மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவர்கள் நெல்லை மாவட்டத்தில் அதிகமாக தண்ணீர் தேங்கிய ஜங்ஷன், கொக்கிரகுளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிந்து பூந்துறை, சி என் வில்லேஜ், குறுக்குத்துறை, நொச்சிக்குளம், முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் வெளியேற முடியாமல் வீடுகளில் மேல் தளங்களில் தஞ்சம் அடைந்திருந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இப்பணிகளை தங்களுடைய உயிரை பணயம் வைத்து செய்த மீனவர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு பாராட்டிகை கூப்பி நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் தவிக்கும் பயணிகளுக்கு ஹெலிஹாப்டர் மூலம் உணவு கொண்டு செல்லும் முதற்கட்ட வேலைகளை பார்த்து வருகிறோம். தேசிய பேரிடர் படை அங்கு உள்ளனர். ரயில்வே மூலமாகவும் அந்த பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக முக்கியமான சவாலாக தண்ணீர், கரெண்ட் உள்ளது. படகை உள்ளே கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை, ஹெலிஹாப்டர் மூலமாக தான் கொண்டு செல்கிறோம். தண்ணீர் வடிய வடிய நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்றார்.