தென் தமிழ்நாடு மாவட்டங்கள் முற்றிலுமாக மழையாலும் வெள்ளத்தாலும் கடந்த இரண்டு தினங்களாக பெரும் அவதைக்குள்ளாகி வருகின்றது. மணிக்கு  மணி அங்கு நிலைமை மிகவும் மோசமாகி வருவதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அரசு தரப்பிலும் தன்னார்வளர்கள் தரப்பிலும் நிவாரணப் பணிகளும் மீட்புப் பணிகளும் நடைபெற்று வந்தாலும் வெள்ள நீரினால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், நெல்லை உடையார்பட்டியில் வெள்ளத்தினால் மூழ்கிய வீட்டில் மீட்கப்பட்ட தந்தை சிவாவை (45 ) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார்.


சிவாவின் உறவினர் வீடுகளிலும் வெள்ளம் புகுந்துவிட்டதால், பள்ளி படிக்கும் சிவாவின் மகளும் கல்லூரி படிக்கும் சிவாவின் மகனும் தந்தையின் உடலை கொண்டு செல்ல வழி இல்லாமல் தவித்து வருகின்றனர். சிவாவின் மனைவி திருச்சியில் பணியாற்றி வருகின்றார். தொடர் மழை மற்றும் அனைத்து வழி போக்குவரத்தும் தடைபட்டுள்ளாதால் அவராலும் இன்னும் நெல்லைக்கு வரமுடியவில்லை.  இந்த சம்பவம் தொடர்பான சமூகவலைதளப் பதிவுகள் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. மேலும் தனது தந்தையில் உடலை அரசு மருத்துவமனையில் வைத்துக்கொள்ள அனுமதி வேண்டும் எனவும் சிவாவின் பிள்ளைகள் கோரிக்கை வைத்துள்ளனர். 


அமைச்சர்கள் பேட்டி


நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கொட்டி தீர்க்கும் கனமழையால் 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து நெல்லை வெள்ள பாதிப்புகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட கூடுதல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  எனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து மாநகரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் தொடர்ந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அமைச்சர் உதயநிதி உதவிகளை வழங்கினார். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் தங்கம் தென்னரசு ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில்,
நெல்லையில் மிக கனமழை பெய்த காரணமாக மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொறுப்பு அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் களத்தில் இருந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை செய்து வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 3500 பேர் நேற்று காலை முதல் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு போன்ற வசதிகள் செய்து கொடுத்துள்ளோம் சில இடங்களில் மழை அதிகமாக பெய்தது சிலர் வீடுகளிலே இருப்பதாக தெரிவித்தனர். அவர்களுக்கும் சாப்பாடு கொடுப்பதற்கு படகு வசதி ஏற்பாடு செய்துள்ளோம். 


என்னையும் சக அமைச்சர்களையும் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் இங்கு அனுப்பியுள்ளார். நாங்கள் மீட்பு பணியில் தயார் நிலையில் இருக்கிறோம். நேற்றை விட இன்று மழை குறைந்துள்ளது. தண்ணீரும் வடிய தொடங்கியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லை சந்திப்பு, சிந்துப்பூந்துறை பகுதியில் படகு மூலம் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். அளவுக்கு அதிகமாக படகுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. 36 கிராமங்கள் மற்றும் இரண்டு பேரூராட்சிகள் மழை வெள்ளத்தால் நெல்லையில் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குளங்கள் உடைந்திருப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் முடிந்தவரை வெளியே வரவேண்டும். நெல்லையில் கால்வாய்கள் தூர் வாரும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று விட்டது. அடுத்த கட்டமாக கான்கிரீட் போடும் பணிகள் மட்டுமே நடைபெற இருக்கிறது. கால்வாயில் தற்போது பிரச்சனை இல்லை. முதல்வர் நாளை டெல்லிக்கு சென்று பிரதமரிடம் நிவாரணம் கேட்க உள்ளார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்த மாவட்டத்திற்கு தேவையான நிவாரணத்தையும் முதல்வர் அறிவிப்பார்.  பொதுமக்களுக்கு பால் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இது குறித்து அறிவுறுத்தியுளளோம். பத்தாயிரம் லிட்டர் பால் கூடுதலாக கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.


தொடர்ந்து திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த ரயிலில் இருக்கும் பயணிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் அளித்த பதிலில, ”திருச்செந்தூரில் இருந்து சென்னை சென்ற ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயிலில் இருக்கும் பொது மக்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு மீட்பு பணிக்காக சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. பயணிகளில் சிலர் அருகில் உள்ள பள்ளிகளில் தங்கி உள்ளனர். சிலர் ரயில் நிலையங்களிலையே தங்கி உள்ளனர். தாசில்தார், பள்ளியில் வைத்து 500 பேருக்கு உணவு ஏற்பாடு செய்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 84 ராணுவ வீரர்கள் மீட்பு பணிக்கு செல்கின்றனர். இது தவிர ஊட்டியில் இருந்து 50 ராணுவ வீரர்கள் நெல்லைக்கு மீட்டுப் பணிக்கு இன்று இரவு வந்து சேர்வார்கள் என தெரிவித்தார்.