மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், வேம்பார், தருவைகுளம் ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 543 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த 61 நாட்களிலும் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.



 


மேலும், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் கடந்த பிப்ரவரி மாதம் முதலே மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடித் தடைக்காலம் இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவடைவதை தொடர்ந்து சுமார் 4 மாதங்களுக்கு பிறகு நாளை (புதன்கிழமை) முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் தயாராகி வருகின்றனர். விசைப்படகுகளில் டீசல் நிரப்புதல் போன்ற பணிகளில் மீனவர்கள் நேற்று ஈடுபட்டனர். படகுகளில் ஐஸ் கட்டிகளை ஏற்றுதல், வலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றுதல் போன்ற பணிகளை இன்று மேற்கொள்கின்றனர். தொடர்ந்து நாளை அதிகாலை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். தடைக்காலம் முடிந்து கடலுக்கு செல்வதால் மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.




இதுகுறித்து, மீனவர் சங்க தலைவர் தர்ம பிச்சை செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஏப்ரல் 15 முதல் தடை விதிக்கப்பட்டதால் நாங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை தற்போது தடை காலம் இன்றுடன் முடிவடைவதால் நாளை நாங்கள் மீன்பிடிக்க செல்வதற்காக தயாராகி வருகிறோம். மீன்பிடி தடை காலத்தில் எங்களுக்கு வழங்க வேண்டிய தடை கால நிவாரணத்தொகை அரசு இதுவரை வழங்கவில்லை. மீன்பிடி தடை காலத்தில் நாங்கள் அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டில் இருக்கிறோம். ஆனால் கேரளா மாநில விசைப்படகுகள் இங்கு வந்து மீன் பிடித்து நாசப்படுத்தி வருகிறது. இதனை பலமுறை சுட்டிகாட்டியும் தடுக்க மீன் வளத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நாங்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்கு செல்லும்பொழுது என்ன கிடைக்கும் என தெரியவில்லை என்றார்.




மீன்பிடித்தடைகாலத்தில்  உரிய காலத்தில் நிவாரணம் வழங்க வேண்டும். அரசு கொடுக்கும் 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவியால் நாங்கள் இரண்டு மூன்று வாரங்களுக்கு சாப்பிட முடியும். எனவே அரசு அறிவித்தபடி நிவாரண தொகையை உரிய காலத்தில் வழங்க வேண்டும். தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் மீனவர் கூட்டுறவு சங்கத்தை மூன்று பிரிவாக பிரித்து அதன் மூலம் மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்கள் விரைவாகவும் முறையாகவும் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.




மீனவர்களுக்கு மீன்பிடி தவிர வேறு தொழில் தெரியாது எனவே அவர்களின் வாழ்வாதாரத்தை அரசு உரிய அக்கறை செலுத்த வேண்டும். மீனவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும். மீனவர் உயிரிழந்த பின்பு அவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை வழங்கி அவருடைய வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண