புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் களைகட்டிய பக்ரீத் பண்டிகை விற்பனை - கிடுகிடுவென உயர்ந்த ஆடு விலை - ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது. கடந்த ஆண்டுகளை விட 3000 ரூபாய் வரை ஆடுகளின் விலை உயர்ந்துள்ளது. இருந்த போதிலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி வருகின்றனர். சுமார் 6 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. இங்கு வாரம் தோறும் சனிக்கிழமை ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம். மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, விருதுநகர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்குவந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.





இங்கு சாதாரண வாரங்களிலேயே ஒருகோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம். தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாவது வழக்கம். அந்தவகையில் வரும் 29ந்தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை வியாபாரம் களை கட்டியது.




வெள்ளாடு, சீனி வெள்ளாடு, செம்மறியாடு, கொடி ஆடு  என பலதரப்பட்ட வகைகள் கொண்ட 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். 7 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி 8,000 ரூபாயும், எடைக்கு ஏற்ப 33 ஆயிரம் வரை விற்பனை இருந்தது. ஜோடி ஆடு 15 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குர்பாணி கொடுக்க வேண்டும் என்பதால் அதிக அளவில் செம்மறி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டுகளை விட ஆடுகளின் விலை அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர். சுமார் 3000 ரூபாய் வரை விலை கூடுதலாக இருந்ததாகவும், 6 கோடி ரூபாய் விற்பனை இருந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர்