கன்னியாகுமரி மாவட்டம்  திங்கள்நகர் அடுத்த தலக்குளம் புதுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜம். இவர் கடந்த புதன்கிழமை இரவு வீட்டின் அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள்  வண்டியை நிறுத்தி ராஜத்திடம் வழி கேட்பது போல் பேசியுள்ளனர். அப்போது ராஜம் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் கண் இமைக்கும் நொடியில் அவர்  கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.  செய்வதறியாது நின்ற அவர் இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின்  அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் குறித்து விசாரணை நடத்தி ஆய்வு செய்தனர். 


காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராஜத்திடம் வழிப்பறியில் ஈடுபட்டது தக்கலை பகுதியை சேர்ந்த ஜெகதீஷன் மற்றும் மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்த பெலிக்ஸ் ஆகிய இருவர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து தக்கலை அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் இரணியல் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து இரணியல் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை  நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. 


TN TRB Assistant Professor: ரூ.1.82 லட்சம் ஊதியம்; 4000 உதவிப் பேராசிரியர் இடங்கள்- தகுதி, வயது வரம்பு..!


குறிப்பாக ஜெகதீஷ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் சிறையில் இருக்கும் பொழுது பெலிக்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் நண்பர்களான நிலையில் கடந்த 15 நாட்கள் முன் சிறையில் இருந்து இருவரும் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். பின் இருவரும் கூட்டு சேர்ந்து வழக்கு செலவிற்கு பணம் இல்லாத காரணத்தினால் திட்டம் தீட்டி இந்த சம்பவத்தில் இறங்கியுள்ளனர். இதற்காக கடந்த 4 ஆம் தேதி இரணியல் பகுதியை சேர்ந்த அஜின் என்பவரது இருசக்கர வாகனத்தை திருடியுள்ளனர். அதை எடுத்துக் கொண்டு வரும் வழியில் ராஜத்திடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்ததுள்ளது.  இதை அடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறையில் நண்பர்களாகி ஜாமினில் வந்து வழக்கு செலவிற்காக இருசக்கர வாகன திருட்டு, வழிப்பறியில் போன்றவற்றில் ஈடுபட்டு இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக்குள்ளே கம்பி எண்ணும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.