தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பிளாஸ்டிக் டாப்பாவிற்கு பதிலாக பனை ஓலை பெட்டியில் பிரியாணி மற்றும் ஃபாஸ்புட் உணவு வகைகளை கொடுத்து வருகிறார் பாஸ்ட்-ஃபுட் கடை நடத்தும் மகேந்திரன் என்ற இளைஞர்.
இயற்கை மணத்துடன் கிடைக்கும் பிரியாணி மற்றும் உணவு பொருள்களை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
தமிழகத்தில் நெகிழி ஒழிப்பு குறித்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சள் பை திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. அரசின் விழிப்புணர்வுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தினை சேர்ந்த மகேந்திரன் என்ற இளைஞர்.
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் கடந்த 2000-ம் ஆண்டில் படிப்பை முடித்து பின்னர் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்துவிட்டு, தற்பொழுது தனது சொந்த ஊரில் துரித உணவகம் நடத்தி வருகிறார்.
விளாத்திகுளம் பகுதியில் பனை ஓலை பெட்டி செய்யும் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளதால், அவர்கள் பயன்படும் வகையிலும், அரசின் விழிப்புணர்வுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் என்று நினைத்த மகேந்திரன், நெகிழி பொருள்களை தவிர்த்து பனை ஓலை பெட்டியில் உணவு பொருள்களை கொடுக்க முடிவு செய்தார். அதன்படி பாலித்தீன் பைக்குகளுக்கு மாற்றாக சற்று வித்தியாசமான முறையில் புதிய முயற்சியாக பனை ஓலைப் பெட்டிகளில் பிரியாணிகளை வழங்கி வருகிறார்.
1 நபர் சாப்பிடும் அளவிற்கான பிரியாணியை சிறிய பனையோலைப் பெட்டியில் ரூ.100-க்கும், இரண்டிலிருந்து 3 நபர்கள் சாப்பிடும் அளவிற்கான பிரியாணியை பெரிய பனையோலைப் பெட்டியில் ரூ.180-க்கும் விற்பனை செய்து வருகிறார்.
இப்பகுதியில் சற்று வித்தியாசமான முறையில், பனையோலைப் பெட்டிகளில் சிக்கன், மட்டன் பிரியாணியை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்வதால், இந்த பனையோலை பெட்டி பிரியாணி கடையானது, இப்பகுதியில் உள்ள பிரியாணி பிரியர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உள்ளுர் வாசிகள் மட்டுமின்றி விளாத்திகுளம் அருகில் கிழக்கு கடற்கரை சாலை வழியில் இந்த கடை இருப்பதால் இப்பகுதி வழியாக செல்லும் வெளியூர் நபர்கள், சுற்றுலா செல்பவர்களும் ஆர்வமுடன் ஓலைப்பெட்டி பிரியாணி கடையில் பிரியாணி வாங்க தவறுவதில்லை.
பிரியாணி மட்டுமின்றி பாஸ்ட்-புட் உணவு வகைகளையும் ஓலை பெட்டியில் வழங்கி வருகிறார்.இங்கு பிரியாணி வாங்கும் வாடிக்கையாளர்கள் பனை ஒலை வாசத்துக்கு பிரியாணி இன்னும் செம டேஸ்ட் என்கின்றனர்.