இந்தியாவின் உப்புத்தேவையை பூர்த்தி செய்வதில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மற்ற கடலோர மாவட்டங்களை விட தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.




தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் ஆறுமுகநேரி வரையிலான கடலோர பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி தொழில் நடந்து வருகிறது. இதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். உப்பள தொழிலில் உப்பு பாத்தி மிதித்தல், உப்பள செம்மை படைத்துதல், உப்பள பாத்தி கட்டுதல், உப்பளத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், உப்பு வாருதல், உப்பு அம்பாரம் ஏற்றுதல், உப்பு லாரிகளில் ஏற்றுதல், உப்பு பண்டல் கட்டுதல், உப்பு பாக்கெட் போடுதல் என பல்வேறு பணிகளில் உப்பள தொழிலாளிகள் ஈடுபடுகின்றனர்.




உப்பள தொழிலாளர்களுக்கு தமிழக அரசு மழைக்கால நிவாரணத் தொகையாக ரூ.5 ஆயிரம் அறிவித்து, அதனை செயல்படுத்தி வருகிறது. ஆனால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 தொழிலாளர்கள் மட்டுமே இந்த உதவித் தொகையை பெறும் நிலை உள்ளது. இதனால் மற்ற தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் முறையாக நலவாரியத்தில் இணைக்கப்படாததே காரணமாக கூறப்படுகிறது. ஆகையால் அனைத்து தொழிலாளர்களையும் நலவாரியத்தில் இணைக்க அரசு சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




தூத்துக்குடி அருகே உள்ள கல்மேடு பகுதியை சேர்ந்த உப்பள தொழிலாளி வேட்டை பெருமாள் கூறும் போது,  “உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த நிவாரணத் தொகையை பலர் பெற முடியாத நிலை உள்ளது. முன்பு உப்பளத் தொழிலாளர் சங்கங்கள் மூலம் நலவாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால் தற்போது அனைத்தும் ஆன்லைன் மூலம் கொண்டு வரப்பட்டதால் சங்கங்களின் ஈடுபாடு குறைந்து விட்டது. இதனால் அரசு சிறப்பு முகாம்களை நடத்தி அனைத்து உப்பள தொழிலாளர்களையும் நலவாரியத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல தொழிலாளர்களுக்கு நலவாரியம் குறித்து தெரியாத நிலைதான் உள்ளது. இதனால் அவர்கள் மழைக்கால நிவாரணத்தை பெற முடியாத நிலையே உள்ளது” என்றார்.




தூத்துக்குடியை சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநில இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, “உப்பள தொழில் பருவம் சார்ந்த தொழில். ஒருநாள் மழை பெய்தாலும் வேலைவாய்ப்பு பறிபோய்விடும். இந்த பிரச்சினையை மக்கள் நீண்டகாலமாக சந்தித்து வருகின்றனர். இதனால் மழைக்கால நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதன்படி தற்போது கிடைத்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் உப்பள தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் சுமார் 3 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே மழைக்கால நிவாரணம் கிடைத்து உள்ளது. இந்த பிரச்சினைகளை களைய அனைத்து உப்பள தொழிலாளர்களையும் நலவாரியத்தில் இணைக்க வேண்டும். நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. அந்த நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்” என்கிறார்.