தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 12 ஆயிரத்து 800 டன் ஜிப்சம் கழிவுகள் வெளியேற்றப்பட்டு உள்ளன.




தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டம் நடந்தது. இதில் 100-வதுநாள் போராட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.




இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. இந்த நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஸ்டெர்லைட் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றவும், ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவதற்கு அனுமதி அளித்தது.




இதையடுத்து அந்த பணிகளை மேற்கொள்வதற்காக உதவி ஆட்சியர் கவுரவ்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அமைத்தார். இந்த குழுவினர் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஆலை வளாகத்திலும், நுழைவுவாயிலிலும் மொத்தம் 18 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் அதனை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டது.


இந்த குழுவினர் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு கழிவுகளை அகற்ற அனுமதி அளித்தனர். அதன்படி கடந்த 23-ந் தேதி முதல் ஜிப்சம் கழிவுகள் லாரிகள் மூலம் எடுக்கப்பட்டு பல்வேறு சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 12 ஆயிரத்து 800 டன்  ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. இந்த பணிகளை உதவி ஆட்சியர் தலைமையிலான குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆலையை சுற்றிலும் போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண