நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை விசிக தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் பொழுது,


”நெல்லையில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வெள்ளக்கோவில் பகுதி மக்களை சந்தித்து விசிக சார்பில் ஆறுதல் கூறினோம். 180 குடும்பங்களுக்கு நிவாரண உதவி செய்யப்பட்டது. இதே போல இன்னும் 3 மையங்களில் 1000 பேருக்கு விசிக சார்பில் நிவாரணம் வழங்க உள்ளோம். நாளை தூத்துக்குடியில் 4 ஆயிரம் பேருக்கு 5 மையங்களில் வழங்க உள்ளோம். கடுமையான பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு இந்த நிவாரணம் போதாது. முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள புயல் வெள்ள பாதிப்பால் மக்கள் துயரத்தில் சிக்கி இருக்கிறார்கள் அதிலிருந்து மக்களை மீட்க ஒன்றிய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


டிச 4 வடமாவட்டங்களில் கடுமையான புயல் மழை,  அதே போல டிச 17,18 இல் தென் தமிழகம் பாதிக்கப்பட்டது. இதனை தீவிர பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்ததோடு இரண்டு பேரிடரையும் சேர்த்து 21 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.


ஆனால் மாநில அரசுக்கு வழங்கக்கூடிய மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு வழக்கமாக வழங்கக்கூடிய 900 கோடி ரூபாய்தான் இரண்டு தவணைகளாக வழங்கியிருக்கிறார்கள். பாதிப்பை ஈடு செய்ய கூடுதல் நிதி ஏதும் வழங்கவில்லை. ஒன்றிய அமைச்சர் தூத்துக்குடி வந்து நேரடியாக பாதிப்பை பார்த்து சென்றுள்ளார், இதன் பின்னராவது அவருக்கு மனம் இறங்க வேண்டும். கருணை மேலோங்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன், பாதிப்பை பார்வையிடும் முன்னே பேரிடராக அறிவிக்க முடியாது என்று மாநில அரசை விமர்சிப்பதில் கவனமாக இருந்தார். இது போன்ற காலங்களில் பேரிடரை பேரிடாக பார்க்க வேண்டுமே தவிர ஆளும் கட்சிக்கு எதிராக விமர்சனம் செய்வது மக்களின் துயரத்தில் ஆதாயம் தேடுகிற ஒரு அற்ப அரசியலாக பார்க்க முடிகிறது.


விசிக சார்பில் 29-ஆம் தேதி இந்த பாதிப்பை பேரிடராக அறிவிக்க கோரியும், தமிழக அரசு கேட்ட  21 ஆயிரம் கோடியை ஒதுக்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட  தலைநகரங்களிலும் நடைபெறுகிறது. வரும்  நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையே வேண்டும் என்ற முக்கியமான  கோரிக்கையையும் இதில் வலியுறுத்துகிறோம். எலக்ட்ரானிக் மிஷின் வெளிப்படைத் தன்மை கொண்டதாக இல்லை. இதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும் என பல வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே பழைய முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றார். 


நிதியமைச்சர் சொல்வது பொறுப்பற்ற ஒரு பதில். பிரதமர் எந்த முடிவையும் அறிவிக்காத போது நிதியமைச்சர் தன் விருப்பம் போல் அரசின் கொள்கை முடிவுகளை அறிவிப்பது ஏற்புடையதல்ல. இந்திய ஒன்றிய அரசின் நிலைப்பாடு கொள்கை முடிவு தலைமை அமைச்சராக இருக்கும் மோடி தான் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், அவர் ஒப்புதலோடு நிதி அமைச்சர் பேசுகிறாரா? அல்லது அவரே தான்தோன்றிதனமாக பேசுகிறாரா? எப்படி கொள்கை முடிவை இவர் எடுக்கிறார்? அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார். அதற்கு எந்த அவை அவருக்கு அங்கீகாரம் தந்தது என்ற  கேள்வி எழுகிறது, அவரது பேச்சு தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக உள்ளது. திமுக அரசு  எதிராக பேசுகிறோம் என நினைத்து தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்தார்.