ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு மழைபெய்து நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளதால்  கடந்தாண்டுகளைக் காட்டிலும் சரணாலயங்கள் மற்றும்  நீர்நிலைகளில் பறவைகள் அதிகளவில் காணப்படுகிறது. இதனையடுத்து பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாக மீண்டும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. மாவட்டத்திலுள்ள கடல் பகுதிகள், சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகள் அக்டோபர்  முதல் மார்ச் வரை சீசன் காலக்கட்டத்தில் வருகின்றன.


இவை இனப்பெருக்கம் செய்து மீண்டும் சொந்த நாடுகளுக்கு  திரும்பி செல்கின்றன. இந்தாண்டு சீசனை முன்னிட்டு, கடல்பரப்புகள், நீர்நிலைகளில் பறவைகள் அதிகளவில் காணப்படுகிறது. இதனை அடுத்து ராமநாதபுரம்  வன உயிரின காப்பகம் சார்பில் கடந்த  ஜனவரி  28,29 ஆகிய தேதிகளில் காரங்காடு, தனுஷ்கோடி, மணாலி தீவு, குந்துகால் ஆகிய இடங்களில் முதல்கட்ட பறவைகள் கணக்கெடுப்பு முகாம் நடந்தது. இதில், செங்கால் நாரை, உல்லான், ஆலா உள்ளிட்ட 27ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்திருந்தன.



இதனை தொடர்ந்து, இந்த மாதம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் வனஉயிரினக்காப்பாளர் பகான் சக்தீஸ் சுதாகர், ரேஞ்சர் ஜெபஸ் மேற்பார்வையில், நீர்நிலைகளில் இரண்டாம் கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில், தேர்த்தங்கால், காஞ்சிரங்குளம், சித்திரக்குடி, சக்கரக்கோட்டை, மேல, கீழச்செல்வனூர், உத்திரகோசமங்கை, மல்லல், ராமநாதபுரம் பெரியகண்மாய், ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் ஆகிய இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.




இந்த பறவைகள்  கணக்கெடுப்பின்போது 50 பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதில் சரணாலய பகுதியினை காட்டிலும் சரணாலயத்திற்கு வெளிப்பகுதியிலும் அதிக அளவில் பறவைகள்  இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும்,  இந்த கணக்கெடுப்பில் சிக்கல் பகுதியில் உள்ள சிக்கல் கண்மாயில் சுமார் 240 பூநாரை, (பிளமிங்கோ) பறவைகள் காணப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே போல உத்தரகோசமங்கை கண்மாய் மல்லல் கண்மாய் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்களிலும் அதிகளவில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. 




பறவைகள் சரணாலய கண்மாய்களில் சுமார் 75 சதவீதத்திற்கு நீர் நிரம்பி உள்ளதால் பறவைகள் இரண்டு முறை மற்றும் சில பறவைகள் மூன்று முறை இனப்பெருக்கம் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கணக்கெடுப்பில் மேலும் சுமார் 120 இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், அதிக அளவில் நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர்க்காகங்கள் மற்றும் கொக்குகள் காணப்பட்டது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பின் முடிவில், சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது கடந்த ஐந்து வருடங்களை காட்டிலும் இந்த ஆண்டு மிக அதிக பறவைகள் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.