நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வண்ணாரபேட்டையை சேர்ந்த சிவபெருமாள் (42) என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்
நெல்லையில் வெடிகுண்டு மிரட்டல்:
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனையிட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து நெல்லை ரயில் நிலையத்தின் பயணிகள் தங்கும் அறைகள், தண்டவாளங்கள், ரயில்வே பிளாட்பாரங்கள், லக்கேஜ் வைக்கும் இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது.
அதேபோல் இந்த மிரட்டல் காரணமாக நெல்லையின் பொது இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் தீயணைப்பு துறை போலீசார் ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் உள்ள பொருட்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
போதை ஆசாமி கைது:
இந்நிலையில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வண்ணாரபேட்டையை சேர்ந்த சிவபெருமாள் (42) என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிவபெருமாளை நெல்லை சந்திப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவபெருமாள் முழு போதையில் இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வந்துள்ளதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.