நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்தவர் சிவகார்த்திகேயன் என்ற இளைஞர். இவர் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு தனது கோரிக்கைகள் குறித்து மனுவை அளிக்க வந்தார். குறிப்பாக காவல்துறையின் பலத்த பாதுகாப்பு மற்றும் சோதனைகளை தாண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென்று 5 லிட்டர் கேனில் தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த ஒரே ஒரு காவலர் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேணை பிடுங்கினார். தனிநபராய் தீக்குளிக்க முயன்ற சிவகார்த்திகேயனிடம் காவலர் போராடிய நிலையில் அடுத்தடுத்து வந்த காவலர்கள் மற்றும் அதிகாரிகள் அவரை அழைத்து சென்று தண்ணீர் ஊற்றினர்.
தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், கடந்த 2012 ஆம் ஆண்டு கூட்டுறவு தணிக்கை துறையில் அதிகாரியாக பணியாற்றிய இவரின் தந்தை சந்திரசேகர் பணியின் போது உயிரிழந்ததன் அடிப்படையில் வாரிசு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் போராடி வருவதாகவும், ஆனால் இதுவரை தனக்கு பணி வழங்காமல் உரிய பதிலளிக்காமலும் அலைக்கழித்து வருவதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக முதலமைச்சருக்கும், மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் பலமுறை மனு அளித்தும் தனக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை என்றார். மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது வீட்டில் இருந்த 40 சவரன் நகை உறவினர்களால் திருடப்பட்டதாகவும், அது குறித்து நெல்லை டவுண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். படிப்பை இழந்து குடும்பத்தை நடத்துவதற்கு கடினமான சூழலில் தவித்து வருவதாக கூறிய அவர் தனது இந்த இரண்டு கோரிக்கைகளும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் அதிருப்தி அடைந்த நிலையில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாயிலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார் என தெரிய வந்ததுள்ளது.
தொடர்ந்து அவரிடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து காவலர்கள் அவரை முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அவ்வபோது நடைபெறும் தற்கொலை முயற்சி சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் செல்லும் இரண்டு வாயிலிலும் காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பாதுகாப்பு மற்றும் சோதனைகளை தாண்டி ஐந்து லிட்டர் மண்ணெண்ணையை கேனில் கொண்டு வந்து சிவகார்த்திகேயன் என்ற இளைஞர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..