கறிகடையில் வேலை பார்க்கும் ஒருவர் கோழியை உயிருடன் தோல் உரித்து துண்டு துண்டாக வெட்டி துன்புறுத்தி இறைச்சி ஆக்கும் வீடியோ வெளியானதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள செங்கவிளையைச் சேர்ந்த வாலிபர் மனு. கோழி இறைச்சி விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.இந்த நபர், கோழி உயிருடன் இருக்கும் போது அதன் தோலை உரித்து கொடூரமாக துடிக்க துடிக்க வெட்டி இறைச்சி ஆக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த வீடியோ தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த கடையில் இறைச்சி வாங்க வந்த ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்த வீடியோ காட்சியில் எந்த மனவருத்தமும் இல்லாமல் மிகவும் கொடூரமாக சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியுடன் இந்தக் கொடூரத்தைச் செய்திருக்கிறார் அந்த இளைஞன். இறைச்சிக் கடைகளில் கோழியின் தலையை துண்டித்து உயிர் போன பிறகு தோல் உரிக்கப்பட்டு இறைச்சி துண்டுகளாக வெட்டப்படுவது வழக்கம். ஆனால் அந்த வாலிபர் இரக்கமே இல்லாமல் மொபைல் போனை பார்த்து சிரித்து கொண்டே இந்த கொடூரத்தை நிகழ்த்தி உள்ளார். உயிருடன் தோலை உரித்து துடிக்க துடிக்க துண்டு துண்டாக வெட்டும் போது கோழி கதறி அழுவதும், துடி துடிப்பதும் இந்த காட்சிகளில் பதிவாகி உள்ளது.
அவர் இங்கு தொடர்ந்து இந்த கொடூர குற்றத்தை செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மனு வை கொல்லங்கோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாம் என்னதான் வித விதமாக கோழிகளை சமைத்து ருசித்து உண்டால்லும் கூட ஒரு உயிரை சித்திரவதை செய்வது தவறு என்பதை மனித இனம் நினைவில் கொள்ள வேண்டும். கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று சொல்லிவிட்டு கடந்து செல்ல முடியவில்லை இந்த கொடூர கொலையை.