கடந்த சில  நாட்களுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்டதில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து சிக்கன் சாப்பிடுவதால் அதிக உபாதைகள் ஏற்படுவதற்கான புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில் பல்வேறு உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் துரித உணவகங்கள் மற்றும் இதர பிரபலமான உணவகங்களிலும் தொடர்ச்சியாக சோதனையானது செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் நெல்லை மாநகர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட தந்தூரி சிக்கன் மற்றும் சவர்மா கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, சுகாதாரமற்ற முறையில் உள்ள சிக்கன் பயன்படுத்திய ஐந்து கடைகளுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. மேலும் பாளை மற்றும் மேலப்பாளையம் மண்டலத்தில் 26 கிலோ பொறித்த சிக்கன் குளிர் சாதன பெட்டியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து காலாவதி தேதி இல்லாத 50 குபுஸ் பறிமுதல் செய்யப்பட்டு கடை ஒவ்வொன்றிற்கும் தலா ரூபாய் ஆயிரம் அபராதம் இரண்டு கடைகளுக்கு விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கெட்டு போன இறைச்சி உணவுகளை பினாயில் தெளித்து உடனடியாக அழிக்கப்பட்டது.  தொடர்ந்து, சிக்கன் சவர்மா கடைகளில் கெட்டுபோன சிக்கன் கறிகளை பயன்படுத்தக் கூடாது, சமைத்த உணவுப் பொருள்களை ப்ரீஸரில் வைக்கக் கூடாது, உணவுப் பொருள்களில் வண்ணம் சேர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்


அதே போல நேற்றும் மாநகர் பகுதிகளில் நடைபெற்ற திடீர் ஆய்வில், உண்பதற்கு தகுதியற்ற அதிக ரசாயனப் பொடிகள் கலந்து பயன்படுத்திய 40 கிலோ சிக்கன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்துள்ளனர். இதுவரை நெல்லை மாநகர பகுதிகளான பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பதப்படுத்தப்பட்ட மற்றும் முறையாக பராமரிக்கப்படாத 150 கிலோ சிக்கன்களை பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.




அதே போல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள 7 அசைவ  உணவங்களில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி செல்லபாண்டியன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கெட்டுப்போன 12 கிலோ சிக்கன், மற்றும் 2 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதே போன்று கெட்டுப்போன உணவுப் பொருட்களை  உணவகங்களில் பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர். அதிகாரிகளின் தீடீர் சோதனையானது ஓட்டல் உரிமையாளார்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இது போன்ற சோதனைகளை அவ்வப்போது  நடத்தாமல் தொடர்ச்சியாக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.