நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகர் பகுதியில் வசித்து வந்தவர் தெருக்கூத்து கலைஞர் தங்கராஜ். நெல்லை மாவட்டம் மட்டுமின்றி சுற்று வட்டார மாவட்டங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் பங்கேற்று ஒரு சிறந்த கலைஞராக தனது பங்களிப்பை வழங்கி வந்தவர். 63 வயதாகும் நாட்டுப்புற கலைஞரான தங்கராஜ், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இயக்குனர் மாரி செல்வராஜ் மூலம் திரையிலும் அறிமுகமானார். மாரி செல்வராஜின் இயக்கத்தில் முதலாவதாக வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கதாநாயகனின் தந்தையாக தங்கராஜ் நடித்திருப்பார் குறிப்பாக இந்த படத்திலும் அவர் ஒரு நாட்டுப்புறக் கலைஞராகவே அடையாளப்படுத்தப்பட்டு இருப்பார். இந்த திரைப்படத்திலும் ஒரு தெருக்கூத்து கலைஞன் சந்திக்கும் பிரச்சனைகளை தோலுரித்துக் காட்டியிருப்பார். முதல் படத்திலேயே தனது எதார்த்தமான, அர்ப்பணிப்பான நடிப்பால் அனைத்து ரசிகர்களிடமும் பிரபலமானார். தனது பத்து வயதில் கூத்துகளில் பங்கேற்றவர் 50 வருடங்களை தாண்டி கூத்து கலைஞராகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து அடையாளமானவர் தங்கராஜ்.  இவருக்கு 58 வயதில் பேச்சிக்கனி என்ற ஒரு மனைவியும் அரசிளங்குமரி என்ற மகளும் உள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் தங்கராஜுக்கு விருது வழங்குவதற்காக அவர் வீட்டுக்கு எழுத்தாளர் நாறும்பூநாதன் சென்றபோது, மழைநீர் ஒழுகும் ஓலை குடிசையில் வாழும் அவரது ஏழ்மை நிலை அறிந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் தெரியப்படுத்த உடனடியாக மாவட்ட ஆட்சியர் எடுத்து நடவடிக்கை பேரில் குடிசை மாற்று வாரியம் மூலமாக நாட்டுப்புற கலைஞர் தங்கராஜுக்கு வீடு ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டது அவரது மகளுக்கு தற்காலிக பணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலையும் வழங்கப்பட்டது. 






 


இந்த நிலையில் தான் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் நேற்று இரவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணியளவில் நாட்டுப்புற கலைஞர் தங்கராஜ் காலமாகியுள்ளார். இவரது மறைவிற்கு பலரும் தங்களது வருத்தங்களையும், இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த  வகையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். அதில் கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் அவர்கள் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். மக்கள் கலைஞரான திரு. தங்கராஜ் அவர்கள் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அறிமுகமாகி, அதில் வெளிப்படுத்திய உணர்வுப்பூர்வமான நடிப்பால் நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர். அன்னாரது மறைவினால் வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்... மேலும் பலர் நேரடியாக  அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..