தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நீரின்றி அமையாது உலகு என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.




மக்களவைத் தோ்தலில் வெல்வதை மட்டுமே இலக்காக கொண்டு, மாநிலம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சுற்றுப்பயணத்தை துவங்கிய அவர், நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.




இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “பனை மரக்கள்ளில் இருந்து கிடைக்கும் கருப்பட்டிக்கு தான் உலக நாடுகளில் மவுசு அதிகமாக உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பணம்பால், தென்னம்பால், மூலிகைச்சாறு என்று பெயர் மாற்றம் செய்து விற்பனை செய்வோம். நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைத்த உடன் பனை மரங்கள் அதிக அளவில் நடப்படும். பனை மரம் என்பது பெரிய அளவிலான புல். அதன் நுனி முதல் அடி வரை பயன்தரும். மரங்களை நடுவதற்கு ஆயிரக்கணக்கான ஆட்களை வேலைக்கு எடுப்பேன். ஏதாவது பார்த்து பண்ணி விடுங்கள் அடுத்து பாராளுமன்ற தேர்தல் அதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் வருகிறது. என்று நீங்கள் இரட்டை இலை, உதயசூரியனை மறக்கிறீர்களோ அன்றுதான் இந்த நாடும் நாட்டு மக்களும் உருப்படுவார்கள். விவசாயி சின்னத்திற்கு நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால் உங்கள் கதை முடிந்தது. நடிகர் ரஜினி கூறியது போல் உங்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. தேசப்பற்றை பற்றி பேசும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் ராணுவத்தில் உயிரிழந்தால் நிவாரணம் வழங்குவதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவனுக்கு 10 லட்சம் வழங்கப்படுகிறது. எட்டு கோடி மக்களோடு கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி எங்கள் நாம் தமிழர் கட்சி மட்டும் தான்” என்றார்.




முன்னதாக கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வாழ்த்துவோம். என்னுடைய பாதை வேறு. அவருடைய பாதை வேறு. தம்பி விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். நல்லது செய்வதை தட்டிக் கொடுக்கலாம். தள்ளி விடக்கூடாது. இன்றைக்குள்ள அரசியல் தலைவர்களில் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சிறந்தவர். அவரை ஒரு வார்டு கவுன்சிலராகக் கூட நம்மால் ஆக்க முடியவில்லை என்பது தலைகுனிவு. திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு, ஒரு இனத்தை வழி நடத்துவதற்கு தலைவனாக இருப்பதற்கு தகுதி வந்து விடுவது என்று கூறுவது அவமானகரமானது. இது மாறாது. எல்லோரும் சேர்ந்து தான் மாற்ற வேண்டும் என பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.