தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தி கொண்டு செல்லப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் போது கூறியதாவது, மண்ணின் வளங்கள் மக்களுக்கானது, அது வியாபாரப் பொருள் அல்ல. அது இயற்கை தந்துள்ள அரும்பெரும் கொடை.  ஆட்சியாளார்களின் பொறுப்பற்ற பணத்தாசையே அண்டை மாநிலத்திற்கு கொண்டு செல்ல காரணம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கனிம வளம் கடத்தி செல்லப்படுகிறது. அதனை கொண்டு சென்று அண்டை மாநிலத்திற்கு தாரை வார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.


தொடர்ந்து ஆளுநரின் செயல்பாடு குறித்து கேட்ட போது, இது ஒரு அரசியல் விளையாட்டு. அரசியலில் நியாயம் தர்மம் பேச முடியாது. ஆளுநர் சொன்னதில் செந்தில் பாலாஜியின் உடல் நிலை சரியில்லை அதனால் மாற்றுங்கள் என்று சொல்லாமல் அவர் மீது வழக்கு இருக்கிறது  அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் அதனையும் எழுதுங்கள் என்று சொல்கிறார். அது சரிதான். அவர் எதிர்பார்ப்பது அது தான். அதையும் எழுதிவிட்ட பின் சண்டையிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளலாம். ஊழல் பற்றி பேசுகிறார்கள். அதில் மனசாட்சியோடு பேச அண்ணாமலைக்கு தகுதி இருக்கிறது. நான் விசாரித்த வரை அவர் நேர்மையான அதிகாரி. ஆனால் அவரை சார்ந்த கட்சிக்கு அந்த தகுதி உள்ளதா? அதை அவர் மனச்சான்றோடு சொல்ல வேண்டும். ஊழலை பற்றி, அதிமுக திமுக, பாஜக, காங்கிரஸ் என எந்த கட்சிக்கும் தகுதி என்பது கிடையாது. இங்கு நீங்கள் எல்லாருமே ஊழல்வாதி தான், 


வாக்குக்கு காசு கொடுக்கும் இடத்தில் தான் ஊழல் உருவாகிறது. காசு கொடுத்து வாக்கு பெற்ற எந்த அரசியல்வாதிகளுக்கும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துகிற எண்ணம் வராது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு தினங்களில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் 3 கொலைகள் நடைபெற்றுள்ளது. மாணவர்கள் எல்லா தலைவர்களை பற்றியும் படித்து தெரிந்து கொண்டு, யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, ஹிட்லர் உட்பட அனைத்து தலைவர்களை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற எல்லா தலைவர்களின் கருத்தையும் படித்து தெரிந்து கொண்டு நல்லதை மட்டும் மாணவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 


செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினால் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என்ற பயத்தினால் தான் இது போன்ற வேலைகளில் தமிழக அரசு வேகம் காட்டி வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் முதல் கொள்ளைக்காரர்கள், குறிப்பாக, அவர் ஊழல் மூலம் பெற்ற பணத்தை எப்படி பிரித்து கொடுத்தார் என்பது வெளிவரும். அதனால் முதல்வர் பயப்படுகிறார். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜகவுக்கு துணிவிருந்தால் அறிவியுங்கள்,  நாங்கள் கண்டிப்பாக அவர்களை ஆதரிக்கிறோம். விஜய் அரசியலுக்கு வருவதால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள். அவர் வேற, நான் வேற எங்களுக்குள்ள பந்தம் அண்ணன் தம்பி மட்டும் தான் என பேசினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண