தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ளது குற்றாலம் அருவி. தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் இந்த குற்றாலம் அருவிக்கு மாவட்டங்கள் தாண்டி பல மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் குற்றாலம் மெயின் அருவிக்கு அருகிலேயே குற்றாலநாதர் கோவிலும் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சீசன் மற்றும் சபரிமலை பக்தர்கள் வரும் காலத்தில் தற்காலிக கடைகள் அமைக்க கோவில் நிர்வாகம் கடைகளை ஏலம் விடுவது வழக்கம். இதன் மூலம் அறநிலையத்துறைக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் கோவிலுக்கு வருவாய் கிடைக்கும். 




இந்த நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி மெயின் அருவிக்கு செல்லும் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் திடீரென தீப்பிடித்து நாசமானது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோவிலை ஒட்டி உள்ள மண்டபத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஏராளமான கடைகளில் எரிந்து சாம்பலானது.  இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கோவில்களில் சுவரை ஒட்டி கடைகளை அமைக்க கூடாது என்று அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி குற்றாலத்தில் கோவில் மதில் சுவரை ஒட்டி கடைகள் அமைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தாலும், அரசு விதிகளை மீறி கடைகள் அமைக்க வழி செய்தது தான் இந்த விபத்திற்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். விபத்து நடந்த இடத்தில் 15 கடைகள் தீப்பிடித்ததாக சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


ஆனால் அங்கு அமைக்கப்பட்டு இருந்தது 40க்கும் மேற்பட்ட கடைகள் என்றும், இதில் எந்த கடைக்கும் முறையான ஆவணங்கள் எதுவும் கிடையாது, மேலும் கடையை ஏலம் எடுத்தவர்கள் அதை கூடுதல் தொகை வைத்து பிறருக்கு மறு வாடகைக்கு விட்டுள்ளனர். இப்படி மறுவாடகையில் கடை எடுத்தவர்கள் தான் பெரும் இழப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால்  சட்டப்படி அவர்களால் எந்த நிவாரணமும் இதனால் பெற முடியவில்லை. மேலும் தீ விபத்தில் உருக்குலைந்த பொருட்கள் இன்னும் அதே இடத்தில் அகற்றப்படாமல் இருந்து வரும் நிலையில் வரும் சபரிமலை சீசனை ஒட்டி அந்த இடத்தில் மீண்டும் கடைகள் அமைக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக வரும் நவம்பர் 25 முதல் ஜனவரி 20 வரை 81 நாட்களுக்கு கடைகள் நடத்த ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டு வரும் இருபதாம் தேதி ஏலம் நடக்க உள்ளது என்று இந்து அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். தொடர்ந்து அந்த இடத்தில் கடைகள் அமைக்க ஏலம் விடப்பட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாகவும் பல்வேறு இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன..




குற்றாலநாதர் கோயிலுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வரும் நிலையில் 2 இடத்தில் கடைகள் அமைக்க ஏலம் விடுவதை அதிகாரிகள் கைவிடப்பட வேண்டும் என்றும், மேலும் அந்த இடத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள்  வந்து செல்ல வசதியாக பூங்காக்கள் மற்றும் இளைப்பாறும் இடங்கள் அமைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.