தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஈசான போத்தி கோயில் தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் மாரியப்பன் (39). இவர், வாசுதேவநல்லூரில் உள்ள ஓட்டலில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கனகா (33). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை 5.30 மணியளவில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு வருவதாக மனைவி கனகாவிடம் கூறி விட்டு மாரியப்பன் பைக்கில் சென்றுள்ளார். புளியங்குடி அருகே சென்றபோது மர்ம நபர் வழிமறித்து மாரியப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாரியப்பன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து புளியங்குடி டிஎஸ்பி அசோக், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்வம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து நடத்தப்பட்ட விசாரணையில் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து காவல்துறை தரப்பில் கூறும் பொழுது,
"கொலையான மாரியப்பன், கேரளாவில் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் வாசுதேவநல்லூருக்கு வந்துள்ளார். மேலும் மாரியப்பன் வீட்டிற்கு கடந்த 3 ஆண்டாக விக்னேஷ் பால் ஊற்றி வந்துள்ளார். அப்போது மாரியப்பன் மனைவி கனகாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதுகுறித்து உறவினர்கள் மூலம் மாரியப்பனுக்கு தெரியவரவே அவர் மனைவி மற்றும் பால் வியாபாரி விக்னேஷை கண்டித்துள்ளார். மேலும் விக்னேஷுக்கு மாரியப்பன் ஏற்கனவே பணம் கடன் வழங்கியுள்ளார். தன்னிடம் கடனை வாங்கிக்கொண்டு மனைவியையும் அபகரிக்க முயன்றதால் கடனை திரும்ப தரும்படி விக்னேஷிடம் மாரியப்பன் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் மாரியப்பனை கொலை செய்ய முடிவு செய்த விக்னேஷ், இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை பெட்ரோல் போடவந்த மாரியப்பனிடம் ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது மாரியப்பன், பைக்கில் முன் செல்ல, அவரை பின் தொடர்ந்து மற்றொரு பைக்கில் சென்ற பால் வியாபாரி விக்னேஷ், புளியங்குடி நவால் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மாரியப்பன் பைக் மீது மோதி அவரை கீழே தள்ளி இரும்பு கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் மாரியப்பன் மனைவி கனகாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பால் வியாபாரி விக்னேஷ் மற்றும் மாரியப்பன் மனைவி கனகாவை புளியங்குடி போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கனகா நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும், பால் வியாபாரி விக்னேஷ் பாளை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். திருமணத்தை மீறிய உறவில் இருந்த விவகாரத்தை கண்டித்ததால் டீ மாஸ்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.