தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே குடியிருப்பில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீா் வடிகால்வாரிய கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு திட்டம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவா் சீனிவாசன்(50). மேலும் இதே அலுவலகத்தில் பராமரிப்பு உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் ராமசுப்பிரமணியன். இவருக்கு நிலுவைத் தொகையாக ரூ.3. லட்சத்து 93 ஆயிரத்து 700 ரூபாய் வர வேண்டியுள்ளது. இந்த நிலையில் இத்தொகையைப் பெற ரூ.10 ஆயிரம் லஞ்சமாக சீனிவாசன் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக ராமசுப்பிரமணியன் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகாா் அளித்தாா். அப்புகாரின் பேரில் போலீஸ் டிஎஸ்பி.மதியழகன், ஆய்வாளா் ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளா் ரவி, சிறப்பு உதவி ஆய்வாளா் தெய்வக்கண்ராஜா, தலைமை காவலா்கள் பிரபு, வேணுகோபால், கணேஷ் ஆகியோா் கொண்ட தனிப்படையினா் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலகத்தில் மறைந்திருந்தனா். மேலும் லஞ்சமாக கேட்ட 10 ஆயிரம் ரூபாய் பணத்தை ரசாயனம் தடவி ராமசுப்பிரமணியனிடன் கொடுத்து அனுப்பினர். அப்பணத்தை கொண்டு அவர் சீனிவாசனிடம் கொடுத்ததும் உள்ளே நுழைந்த லஞ்சஒழிப்புத்துறை போலீசாா் சீனிவாசனைக் கையும் களவுமாக பிடித்தனா். தொடா்ந்து இரவு வரை விசாரணையானது நடைபெற்று வருகிறது. தனது அலுவலகத்தில் பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருபவரிடமே கண்காணிப்பாளர் லஞ்சம் பெற்று கையும் களவுமாக மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்