தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள  அஞ்சான்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் சந்தன குமார். இவர் கட்டிடம் கட்டும் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி முருகேஷ்வரி. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களது 6 மாத குழந்தை ஹன்சிகா ஶ்ரீக்கு 3 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அதற்காக ஆலங்குளத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வீடு திரும்பியுள்ளனர். இந்த  நிலையில்  மீண்டும் காலையில் குழந்தையின் உடல்நிலை மோசமானதால் ஆலங்குளத்தில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தனியார் மருத்துவமனை அறிவுறுத்திய நிலையில் அங்கு கொண்டு சென்றனர். அங்கும் குழந்தையை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்ட தாய் மற்றும் உறவினர்கள் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர், இது சுற்றியிருந்தவர்களையும் கலங்கச் செய்தது.




தொடர்ந்து குழந்தையின் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்தனர். இது சம்பந்தமாக கடையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வர தாமதித்த நிலையில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இறந்த குழந்தையை தாய் மற்றும் உறவினர்கள் கையில்  வைத்திருந்து செய்வதறியாது பரிதவித்து நின்றது காண்போரை கண்கலங்கச் செய்தது. மேலும் குழந்தையின் தாய் மனநிலை சரியில்லாதவர் போல பிதற்ற தொடங்கினார். உடல்நிலை சரியில்லாமல் இறந்த குழந்தையை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் கூறி பல மணி நேரம் காத்திருக்க வைத்ததால் ஆலங்குளம் அரசு  மருத்துவமனையில் தரையில் அமர்ந்து இறந்த குழந்தையை கையில் வைத்து உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது  அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  பேச்சு வார்த்தைக்கு பின் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் பெற்றோர் கொண்டு செல்ல அனுமதி அளித்தனர்.


மருத்துவர் மற்றும் போலீசாரின் அலட்சியத்தால் இறந்த குழந்தையின் உடலை 5 மணி நேரத்திற்கு மேலாக கையில் ஏந்தி நின்ற தாய் மற்றும் உறவினர்களின் பரிதாப நிலையால் பெற்ற தாயின் மனநிலை பாதிக்கும் நிலைக்கு சென்றதாக அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டி சென்றனர்.  இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது, மேலும் மூன்றே நாள் காய்ச்சலால் 6 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.