தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வயல்வெளியில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கிய விவசாயியை காப்பாற்ற சென்ற பக்கத்து வயலை சேர்ந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மின் வேலியில் சிக்கிய விவசாயி படு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். 


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது அருணாசலபுரம் பகுதி. இப்பகுதியை சேர்ந்த விவசாயி கனகராஜ் (47). இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல், கத்தரிக்காய் போன்ற பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் அப்பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் வன விலங்குகள் அவ்வப்போது புகுந்து பயிர்களை   நாசம் செய்து வந்துள்ளது. குறிப்பாக காட்டு பன்றி, மான்கள் பயிர்களை சேதப்படுத்தி வருவதை தடுக்க கனகராஜ் என்பவர் தனது வயலுக்கு சட்டவிரோதமாக  மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது. மின்வேலியால் வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க, சட்டவிரோதமாக அமைத்த மின் வேலியின் இணைப்பை இரவில் கொடுத்துவிட்டு காலையில் மின் இணைப்பை துண்டித்து வைப்பதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரிகிறது.


இந்த சூழலில் இன்று காலையில் மின் இணைப்பை துண்டிப்பதற்காக விவசாயி கனகராஜ் சென்றுள்ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் மின்வேலியில் சிக்கி உள்ளார். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வயலில் விவசாய பணி செய்து கொண்டிருந்த மற்றொரு விவசாயி முத்துராஜ் (37) ஓடி வந்துள்ளார். பின் அவரைக் காப்பாற்றும் நோக்கில் வேகமாக வந்த போது மின்வேலியை கவனிக்காமல் அதில் அவரும்  சிக்கி உள்ளார். இதனால் முத்துராஜ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதாபமாக  உயிரிழந்தார். மின்சாரம் தாக்கிய கனகராஜ் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் படுகாயம் அடைந்து கிடந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்து வந்த அக்கம் பக்கத்தினர் கனகராஜை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


மேலும் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துராஜின் உடலை  மீட்டு  பிரேத பரிசோதனைக்காக  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் விவசாய நிலங்களை வன விலங்குகள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வரும் நிகழ்வும்  நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இதனால் வேதனையடையும் விவசாயிகள் இது போன்ற சட்டவிரோத செயலில் ஈடுபட்டு இது போன்ற பல்வேறு உயிரிழப்புகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே விவசாயிகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தாமல் தடுக்க அதிகாரிகள் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும் சட்டவிரோத மின் வேலி அமைத்த விவசாயியை மின்சார பாதிப்பில் இருந்து காப்பாற்ற சென்ற மற்றொரு விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண