தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட அடைக்கப்பட்டணம் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் ராமர் கோயில் தெருவை சேர்ந்த கடல்மணி என்பவரது மகன் பார்த்திபன் (வயது 24). இவர் திருமணம் ஆகாதவர். இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி வேனில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவில் தனது ஊருக்கு அருகே உள்ள முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் நடைபெற்ற கோவில் கொடை விழாவை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பி வரும் வழியில் ராமநாதபுரம் ஊருக்கு வடபுறம் காட்டுப்பகுதியில் வைத்து இவரது சித்தப்பா மகனான பாஸ்கர் மற்றும் பாஸ்கரின் நண்பரான குமார் ஆகியோர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகராறு முற்றியதில் பார்த்திபனை, பாஸ்கரும் அவரது நண்பரான குமாரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த பார்த்திபன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த நபர்கள் தப்பி ஓடிய நிலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவம் அறிந்து விரைந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி பாஸ்கர் மற்றும் குமார் ஆகிய இருவரும் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் அவர்களிடம் பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தனது மகன் அவரது அண்ணனான பெரியப்பா மகன் பார்த்திபனை கொலை செய்த சம்பவம் அறிந்து பாஸ்கரின் தாய் செல்வி ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலங்குளம் தீயணைப்பு படை வீரர்கள் செல்வியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மிகவும் ஆழமான கிணற்றில் செல்வி குதித்ததால் கை, கால்களில் பயங்கர காயங்களுடன் மீட்கப்பட்ட செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. கொலை சம்பவம் நடந்த இடத்தை சுற்றிலும் வேறு ஏதேனும் ஆயுதங்கள் உள்ளனவா எனவும் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கொலை சம்பவம் குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வெட்டுப்பட்டு இறந்த பார்த்திபன், குமார் மற்றும் பாஸ்கரிடம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மது போதையில் தகராறு செய்ததாகவும் அதனால் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் இவர்கள் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த அடிதடி பிரச்சனையில் தான் முன்விரோதம் காரணமாக நேற்று இரவு கொலை சம்பவம் அரங்கேறி உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் வெட்டுப்பட்டு இறந்த பார்த்திபன் மீது பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் 15க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தென்காசி அருகே ராமநாதபுரத்தில் இளைஞரை அவரது தம்பியே நண்பருடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் குடும்பத்தினரிடையே சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.