தனக்கு புதுவிதமாக ஸ்நாக்ஸ்தான் வாங்கி வைத்துள்ளார்கள் என தவறுதலாக ப்ளீச்சிங் பவுடரை எடுத்து சிறுமி சாப்பிட்டதால் உணவுக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டு எந்த உணவினை உட்கொள்ள முடியாமல் மெலிந்து மாறியுள்ளார் தென்காசியினை சேர்ந்த 5 வயது சிறுமி. குழந்தையினை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என பெற்றோர்கள் போராடிவருகின்றனர்.
வீட்டில் சிறிய வயதில் குழந்தைகள் இருந்தால் கண்ணாடியிலான பொருட்கள், விஷத்தன்மையுள்ள பொருட்கள் எதையும் நாம் அவர்களுக்கு கண்களுக்குத்தெரியாமல் தான் வைப்போம். ஆனால் அந்த வேலையினைச்செய்யத் தவறினால் இப்படித்தான் நேரிடும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் மேலூர் வாட்டர் ஹவுஸ் பகுதியைச்சேர்ந்த முத்துராமன்- பிரேமா தம்பதியினர். காதல் திருமணம் செய்துக்கொண்ட இவர்கள், உறவினர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்கு இசக்கியம்மாள் என்ற 5 வயதான குழந்தை ஒன்று உள்ளது. இக்குழந்தை வீட்டில் யாரும் பார்க்காத நேரத்தில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக உணவுப்பொருள் தான் என நினைத்து வீட்டின் முன்பு இருந்த ப்ளீச்சிங் பவுடரை எடுத்து சாப்பிட்டு விட்டார். ஆனால் உடனடியாக அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனால் சில மாதங்கள் கழித்து வயிறு வலி என கதறி அழுதுள்ளார் 5 வயதான சிறுமி இசக்கியம்மாள். சாதாரண வலியாகத்தான் இருக்கும் என நினைத்து வீட்டில் உள்ள நாட்டு வைத்தியத்தினை சிறுமியின் பெற்றோர்கள் மேற்கொண்டுள்ளனர். கொஞ்சம் சரியானபொழுதும் மீண்டும் வலியில் துடித்ததோடு, தண்ணீர் மற்றும் உணவுக்கூட சாப்பிட முடியாமல் அவதியடைந்துள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் சோதனை செய்து பார்க்கையில், உணவுக்குழல் மற்றும் குடல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கே சென்ற குழந்தையினைச் சோதித்த மருத்துவர்கள், விஷத்தன்மையுள்ள ஏதோ ஒரு பொருளைச் சாப்பிட்டதன் காரணமாக தான் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், ஓரளவிற்கு உடல் நலம் தேறி வந்த நிலையில், மீண்டும் அவர்களது சொந்த ஊருக்கு குழந்தையினை அழைத்துச் சென்றனர். ஆனால் சில நாள்களிலேயே குழந்தைக்கு மீண்டும் உணவு மற்றும் தண்ணீர் குடிக்க முடியாத பிரச்சனையினைச் சந்தித்துள்ளார். இதோடு மட்டுமின்றி நல்ல உடல்வாகுடன் இருந்த குழந்தை இப்பிரச்சனையால் எலும்பும் தோலுமாக மாறிப்போனது. தன்னுடைய குழந்தைக்கு என்ன நேர்ந்துள்ளது? எப்ப சரி செய்வது என செய்வது அறியாமல் பெற்றோர்கள் திகைத்து நின்றனர். இந்நேரத்தில் தான் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவரான ராஜேஷ் கண்ணா என்பவருக்கு சிறுமியின் உடலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து தெரியவந்துள்ளது. பின்னர் மருத்துவரே சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று பரிசோதனை செய்தமையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார்.
இந்நிலையில் இக்குழந்தையின் உடல் குறித்து மருத்துவர் ராஜேஷ் கண்ணாவிடம் கேட்டபோது, "விஷத்தன்மையுள்ள ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்ட காரணத்தால் ஏற்கனவே சிகிச்சைப்பெற்றும் மீண்டும் உணவுக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட இச்சிறுமிக்கு முதல் கட்டமாக மருத்துவ வசதிகளை தற்பொழுது செய்துகொடுத்துள்ளோம். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இச்சிறுமியின் பெற்றோர்கள், வறுமையான சூழலில் இருப்பதால், இவர்களுக்குத் தேவையான பண உதவியினை நண்பர்கள் மூலம் பெற்று வருவதாகவும் கூறினார். இதோடு மேல் சிகிச்சையில் குழந்தை மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி வருவார் என நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அனைவருக்கும் வேலைக்குச் செல்வதால் வீட்டில் உள்ள பொருட்களை அப்படி அப்படியே விட்டுவிட்டுத்தான் செல்வோம். ஆனால் நம்முடைய அஜாக்ரதையால் இதுப்போன்று சில பிரச்சனைகளை நம் குழந்தைகள் சந்திக்க நேரிடும். எனவே ஆபத்து மிகுந்தப் பொருள்களை குழந்தைகளின் கைகளுக்கு எட்டும் படி இனி மேல் வைக்க கூடாது என்பதனைத் தான் தென்காசி சம்பவம் சேர்ந்த இந்த சிறுமி உணர்த்துகிறது. வீட்டில் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.