உலக தற்கொலை தடுப்பு தினத்தை ஒட்டி நெல்லை பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் இந்திய மனநல மருத்துவர் சங்கம், அன்னை தெரசா அறக்கட்டளை உள்ளிட்டவைகள் இணைந்து தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றது.
இந்த நாடகத்தில் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய மனநல மருத்துவ சங்கத்தில் தமிழ்நாடு தலைவர் பன்னீர்செல்வம் கூறும் பொழுது, "ஒவ்வொரு நொடிக்கும் 40 தற்கொலை உயிரிழப்புகள் நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் உயிரிழப்புகளில் 12 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 15 முதல் 29 வயதுடைய நபர்களின் உயிரிழப்பில் 38 சதவீதம் தற்கொலை என கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகம் தற்கொலை செய்து கொள்ளும் சதவீதத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மாணவர்கள் உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக தற்கொலை நிகழ்ந்து வருகிறது. முன்பு சாலை விபத்துகளில் மாணவர்களின் மரணம் அதிகம் இருந்து வந்த நிலையில் தற்போது தற்கொலை செய்து கொள்வதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு 30 சதவீதமாக இருந்த தற்கொலை எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 12 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது.
மாணவர்களிடம் ஏற்படும் வன்முறை, போதைப் பழக்கம், தற்கொலை மூன்றையும் தடுப்பதற்கு இந்திய மனநல மருத்துவர் சங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வன்முறை இளைஞர் மத்தியில் தற்கொலையை தூண்டுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. சமீப காலமாக திரைக்கு வரக்கூடிய திரைப்படங்கள் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இளைஞர்கள் வன்முறையை தூண்டும் திரைப்படங்களை பார்க்கும் போது மாணவர்கள் மத்தியில் ஹீரோயிசம் உருவாகி சக மாணவர்களுக்குள் பரிகாசம் செய்வது, கேலி கிண்டல் உள்ளிட்டவைகள் செய்வதன் மூலம் மன அழுத்தம் ஏற்பட்டு அதன் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்யக்கூடிய சூழல் உருவாகி வருகிறது.
போதை பழக்கம் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு செயலாக அமைந்திருக்கிறது. பள்ளி கல்லூரிகளுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்திய மாணவர் சங்கம் முடிவெடுத்து அதற்கான பணிகளையும் தமிழக அரசுடன் இணைந்து செய்து வருகிறது. வன்முறையை தூண்டும் விதமாக திரையிடப்படும் திரைப்படங்கள் மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையை பார்த்தாலோ, வன்முறையை அனுபவித்தாலோ மாணவர்கள் மத்தியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். வன்முறை நிறைந்த படங்களை பார்க்கும்போது மாணவர்கள் ஹீரோயின்சத்துடன் செயல்படும் நிலை உருவாகி மன அழுத்தங்கள் ஏற்பட்டு தற்கொலைக்கு செல்லும் நிலை உருவாகும்.
வன்முறை நிறைந்த படங்களுக்கு ஏ சான்றிதழ் மட்டுமே கட்டாயம் வழங்க வேண்டும். யுஏ சான்றிதழ் வழங்குவதை அரசு மாற்ற வேண்டும். வன்முறை நிறைந்த திரைப்படங்களை 18 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்கள் கண்டிப்பாக பார்ப்பதை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வு மாணவர்கள் மத்தியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகளை பெற்றோர்கள் ஆசிரியர்கள் வெளியுலகத்தினர் வைக்கும் காரணத்தினால் அதிக அழுத்தம் மாணவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களை ஆரோக்கியமான சூழலில் வைப்பதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தற்கொலைகளை தடுப்பதற்கு மனநல மருத்துவ சங்கம் மூலம் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.