தமிழக அரசு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்புக்கு வழங்கப்படும் சாம்பலை 6 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க மண்டல பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் அருள்ராஜா தலைமை தாங்கினார். தூத்துக்குடி மண்டல தலைவர் அன்புராஜ் வரவேற்று பேசினார். மண்டல செயலாளர் அரவிந்த் ஆண்டறிக்கை வாசித்தார். மண்டல பொருளாளர் முகமதுகான் வரவுசெலவு அறிக்கை வாசித்தார். மாநில பொது செயலாளர் சிவகுமார், மாநில பொருளாளர் தமிழ்செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் உலர் சாம்பல் உள் ஒதுக்கீடு மற்றும் விலை நிர்ணயம் குறித்து உறுப்பினர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாகிகள் பேசும் போது, "உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பில் மூலப்பொருட்கள் விலையேற்றம், தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலர் சாம்பல் செங்கல்கள் விலையேற்றம் தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. மத்திய அரசின் சுற்றுசூழல் துறை அமைச்சகம் உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு தொழிலுக்கு வழங்கி வந்த 20 சதவீதம் சாம்பல் ஓதுக்கீட்டை நிறுத்தி உள்ளது. மேலும் சாம்பலை வர்த்தக ரீதியில் பெற்றுக்கொள்ள வலியுறுத்தி உள்ளது. இதனை தொடர் கோரிக்கைகளாக வலியுறுத்தி வந்ததால், தமிழக அரசு 6 சதவீதம் வரையில் சாம்பல் வழங்க உத்தரவிட்டு உள்ளது. ஆனால் ஆந்திர அரசு அங்குள்ள உலர் சாம்பலை 20 சதவீதம் வரை உற்பத்தியாளர்களுக்கு வழங்க உத்தரவிட்டு உள்ளது. அதே போன்று தமிழக அரசு உலர் சாம்பல் தயாரிக்கும் தொழிலுக்கு ஒதுக்கீடு செய்யும் அனல் மின் நிலைய உலர் சாம்பலை 5 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக அதிகரித்து உத்தரவிட்டு இருப்பதை, 20 சதவீதமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டு அதற்கான அரசானை பிறப்பிக்கவேண்டும்.
இந்த உத்தரவை அரசு பிறப்பித்தால் தமிழகம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட உலர் சாம்பல் செங்கல் தயாரிக்கும் சிறு, குறு தொழிற்சாலைகள் உயிர்பெறும், மேலும் 5 முதல் 6 லட்சம் வரையிலான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இதனை வலியுறுத்தி மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் சங்கம் சார்பாக வலியுறுத்தப்பட்டு உள்ளது. அவர் இது குறித்து சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு அனல் மின் நிலையங்களில் இருந்து வழங்கப்படும் உலர் சாம்பலை உயர்த்தி தர நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்து உள்ளார்" என்று தெரிவித்தனர். கூட்டத்தில் இணை செயலாளர் அய்யாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.