தமிழக அரசு 'நடப்போம் நலம்பெறுவோம்' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கிலோ மீட்டர் நீள சாலை 'சுகாதார நடைபயிற்சி சாலை'யாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலை சுகாதார நடைபயிற்சி சாலையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த சாலையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் நடைபயிற்சி மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.




தொடர்ந்து உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, உலக இருதய தினம் கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 23 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


கொரோனாவுக்கு பிறகு இருதய பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதயம் காப்போம் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 8,713 துணை சுகாதார நிலையங்கள் என மொத்தமுள்ள 10,999 மருத்துவமனைகளிலும் இருதய நோய்க்கான 14 மாத்திரைகள் அடங்கிய 'லோடிங் டோசஸ்' கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




தமிழக அரசு 'நடப்போம் நலம்பெறுவோம்' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலை 'சுகாதார நடைபயிற்சி' சாலையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு தெற்கு கடற்கரை சாலையை சுகாதார துறை தேர்வு செய்துள்ளது. இருபுறமும் கடல்நீர், உப்பளங்கள் மற்றும் மரங்கள் சூழ்ந்த இந்த சாலை நடைபயிற்சி ஏற்ற ரம்மியமான சாலையாகும்.


இதேபோன்று 38 மாவட்டங்களிலும் சுகாதார 'நடைபயிற்சி சாலை' தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த சாலைகளின் இருபுறங்களிலும் மரங்களை நடுவது, ஒவ்வொரு கிலோ மீட்டர் தொலைவு இடைவெளியிலும் தூரத்தை குறிக்கும் அறிவிப்பு பலகை, நடந்தால் என்ன நன்மைகள் என்பதை குறிக்கும் விளக்க பலகைகள் வைக்கவும், 2 கிலோ மீட்டர் தொலைவு இடைவெளியில் நடைபயிற்சி செய்வோர் அமர்ந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இருக்கைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.




38 மாவட்டங்களிலும் இந்த சுகாதார நடைபயிற்சி சாலைகளை அடுத்த மாதம் (அக்டோபர்) தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த சாலையில் மட்டும் மக்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்பதற்காக இந்த சாலை அமைக்கப்படவில்லை. அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள ஒரு சாலையை தேர்வு செய்து 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த சாலையின் நோக்கம். நடைபயிற்சி மூலம் உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்றார்.




நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் எஸ்.செல்வநாயகம், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சிவக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.