வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தனது மூன்று மகள்களையும் வெளிநாட்டினருக்கு தமிழர் கலாச்சாரத்தை போற்றும் விதமாக  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து வைத்து மகிழ்ந்த தமிழ் குடும்பத்தினர்.




திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மாசிலாமணி ஆனந்தி தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்கள். பிரான்சில் மாசிலாமணி தனியார் உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தமிழ் தம்பதியினருக்கு காயத்ரி,  கீர்த்திகா, நாராயிணி என  மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.  மூவருமே அங்குள்ள பள்ளிகளிலேயே பயின்று வளர்ந்துள்ளனர்.





தற்போது தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும்  மூவரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத மாசிலாமணி ஆனந்தி தம்பதியினர் அவர்களுக்கு தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் முடித்து வைக்க விரும்பியுள்ளனர். அதன்படி அவர்களுக்கு அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான  திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருமணம் முடித்து வைக்க விரும்பியவர்கள் இதுகுறித்து தமிழகத்தில் உள்ள தனது உறவினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 




அதனைத்தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் செய்த நிலையில்  பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழ் குடும்பத்தை சேர்ந்த மாசிலாமணி -ஆனந்தி தம்பதியினர் தங்களின் மூன்று மகள்களுக்கும் ஒரே நேரத்தில்  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜார்ஜ், ராம்குமார்,  மஜ்ஜூ என்ற  மூவருக்கும்  திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வைத்து தமிழ் கலாச்சார முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து வைத்து மகிழ்ந்தனர்.




வெளிநாட்டவருடன் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்துகொண்ட காயத்ரி-ஜார்ஜ், கீர்த்திகா- ராம்குமார், நாராயிணி-மஜ்ஜூ மணமக்களை உறவினர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தமிழ் கலாச்சார முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.




வெளிநாட்டில் பிறந்து அங்குள்ள கலாச்சாரத்தில் வளர்ந்து இருந்தாலும், தமிழ் கலாச்சாரத்தை மதிக்கும் விதமாகவும் தங்கள் 3 பிள்ளைகளுமே வாழையடி வாழையாக வாழ வேண்டும் என விரும்பி தமிழர் கலாச்சாரத்தில் திருமணம் செய்து  வைத்ததாக தாய் ஆனந்தி மகிழ்ச்சியடைந்தார்.




வெளிநாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ் கலாச்சாரத்தை அறிந்து வைத்திருந்ததாகவும் தமிழர் கலாச்சாரத்தையும் பாரம்பரியம் மதிப்பதால் தமிழகத்தில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்த தமிழ் மணமகள் காயத்ரி இந்த திருமணத்தால் இரு நாட்டு கலாச்சாரமும் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்தார்.




தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு மணமகன் மஜ்ஜூ, தங்கள் நாட்டில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வதை விட தமிழ் கலாச்சார முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டது தனக்கு ஒரு புது உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும். தாங்கள் சூடியுள்ள மண மாலையின் பூக்களுக்கு உயிர் இருப்பதை உணர்வதாகவும் தெரிவித்த அவர், உறவினர்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டது ஒரு மதிப்பு மிகுந்ததை உணர்த்துவதாகவும் இந்த திருமணத்தால் கருப்பு வெள்ளை கலாச்சாரங்கள்  ஒன்றிணைகிறது என்றும் அனைத்துக்கும் அன்பு மட்டும் தான் காரணம் என நெகிழ்ச்சி அடைந்தார்.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண