திருச்செந்தூர் தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏரல் வட்டம் சக்கம்மாள்புரத்தை சேர்ந்த நல்லதம்பி மகள் செல்வராணி(19). இவர் திருச்செந்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்லூரி சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு செல்வராணி அறையில் இருந்த மற்றொரு மாணவி ஊருக்கு சென்றுவிட்டார். இதனால் செல்வராணி, தனது தோழியின் அறைக்கு சென்று தூங்கி உள்ளார். நேற்று காலை 7 மணிக்கு எழுந்து அவரது அறைக்கு வந்தார். 8.30 மணியளவில் மாணவிகள் செல்வராணியை சாப்பிட அழைக்க அவரது அறைக்கு வந்தனர். அங்கு அவரது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அறைக்குள் அவர் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதைக்கண்ட சக மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து திருச்செந்தூர் ஆர்டிஒ புஹாரி, தாசில்தார் சுவாமிநாதன், ஏ.டி.எஸ்.பி.க்கள் கார்த்திகேயன், லயோலோ இக்னிஷீயஸ், டி.எஸ்.பி. ஆவுடையப்பன், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியின் அறையில் துண்டு சீட்டு இருந்தது. அதில், எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. எனக்கு படிக்க கஷ்டமாக இருக்கிறது. அதனால் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னை மன்னித்து விடுங்கள் என மாணவி செல்வராணி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாலையில் மாணவி செல்வராணி இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் கல்லூரி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பிரேத பரிசோதனை அறிக்கை பெற்ற பின்னர் முறையாக விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, மாணவியின் உடலை இன்று வாங்கிக்கொள்ளவதாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்