நெல்லை வந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் ரெங்கசாமி எல்லா இடங்களிலும் சென்று மேற்பார்வையிட்டு பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி வேண்டிய வசதிகள் அனைத்தும் செய்திருந்தார். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் மக்கள் நடமாட வேண்டாம் என்று ஒரு கோரிக்கை வைத்திருந்தார்.  நல்ல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதனால் மிகப்பெரிய இழப்புகள் தடுக்கப்பட்டது. எந்த வித அபாயகரமான சூழ்நிலையையும் திட்டமிட்டு மக்கள் ஒத்துழைப்போடு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டால் பாதுகாப்பாக இருக்க முடியும்.. 


ஜி20 மாநாட்டின் மூலம் இந்த நாட்டின் உலகத்தின் பொருளாதாரம், சுகாதாரம், இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என அத்துனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தான்  முக்கியமான கோரிக்கை..  இயற்கை பாதுகாக்கப்படும்பொழுதுதான் இயற்கை நம்மை பாதுகாக்கும். ஜி20 மாநாட்டிற்கு நாம் தலைமை தாங்குவது மிகப் பெருமை வாய்ந்தது. இந்தியா பல விதத்தில் உலகிற்கு வழிகாட்டி இருக்கிறது.. இந்தியாவில் இருந்து பல நல்ல செய்திகள் உலகிற்கு இந்த ஜி20 மாநாட்டின் மூலம் எடுத்துச் செல்லப்பட உள்ளது. இந்தியாவில் 200 இடங்களில் இந்த மாநாடு  நடத்தப்பட இருக்கிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கிரண்பேடி அவர்களுக்கும் எனக்கும்  வித்தியாசம் இல்லை என நாராயணசாமி சொல்கிறார். அதனை ரங்கசாமியிடம் தான் கேட்க வேண்டும் எவ்வளவு ஒருங்கிணைந்த தன்மையுடன் பனியாற்றுகிறோம் என்று. இன்னொருவருடன் என்னை ஒப்பிட விரும்பவில்லை.. நான் வந்ததில் இருந்து புதுச்சேரி மக்களுக்கு  ஆக்கப்பூர்வமாக என்னவெல்லாம் செய்யமுடியும் என செய்து வருகிறோம். குறிப்பாக கோவிட் காலத்தில் மூன்று மாதங்கள் ஆளுநர் ஆட்சிதான் இருந்தது.  அப்போது ரெம்டெசிவீர் மருந்து மற்றும் தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தோம். இன்றும் கூட எந்தெந்த விதங்களில் அரசாங்கத்திற்கு உதவி செய்ய முடியுமோ அரசிற்கு துணையாக  துணைநிலை ஆளுநராக அரசுடன் ஒற்றுமையாக செயல்பட்டு உண்மையான துணைநிலை ஆளுநராக பணியாற்றி கொண்டிருக்கிறேன் என்பது தான் எனது கருத்து. பிணக்கு இல்லை, இணக்கம் தான் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார் 


மேலும் பேசிய அவர், ”ஏன் இப்படி நடக்கிறது என்று நாராயணசாமிக்கு கவலையாக இருக்கிறது. நாம் இப்படி இருக்க முடியவில்லையே. நாம் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோமே. எல்லாம் நல்லா நடக்கிறதே என்ற ஆதங்கத்தில் தினமும் எதையாவது சொல்கிறார்” என்றார். 


மற்றவர்கள் என்னை அரசியல்வாதியாக பார்க்கிறார்கள்.. ஆனால் நான் ஆளுநராக தான் பணியாற்றி கொண்டிருக்கிறேன்  என்றார்.  மணக்குள விநாயகர் கோவிலில் சிலர் யானை வாங்க வேண்டும் என்கின்றனர், சிலர் யானை வேண்டாம் என்கின்றனர். அதனால் பொதுமக்களின் ஒருமித்த கருத்து என்னவென்று பார்த்து அதற்கு பின் முடிவு செய்வார்கள். லட்சுமி யானைக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சிக்குரியது.. மீண்டும் கோவிலில் யானை கொண்டு வருவதற்கு முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் அனைவரின் ஆலோசனைக்கு பின் முடிவு எடுக்க வேண்டும்.. 


திராவிட மாடல் என்பதற்கு பதில் ஒரு  தமிழ் பெயர் சொன்னால் நன்றாக இருக்கும்.. மாடல் என்பது தமிழா, திராவிட மாடல் என்பதற்கு பதில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் ஒரு நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனது கருத்து என கூறினார்..