முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் தொடக்க விழா பாளையங்கோட்டை வ.உ.சி உள்விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை தொடங்கி வைத்த சபாநாயகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறைக்கு சிறப்பு திட்டங்கள் ஒதுக்கப்பட்டு விளையாட்டு ஊக்குவிக்கப்படுகிறது. முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டிகள் மாவட்டம், மண்டலம், மாநில அளவில் நடைபெறும். பள்ளிகள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 வகையான விளையாட்டு போட்டி வைக்கப்படுகிறது. சிலம்பம் இந்த ஆண்டு மாநில போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் கொண்டு சேர்க்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து கபாடி முதலில் மாநில போட்டியில் சேர்க்கப்பட்டு தற்போது தேசிய போட்டியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்ட, மண்டல போட்டிகளில் 3 இடங்களுக்கு மட்டும் பரிசு வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் 4 பரிசுகள் வழங்கப்படுகிறது. 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பில் விளையாட்டு தொடர்பான சான்று வைத்திருப்பவர்களுக்கு பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஒரு விழாவில் நான் ஏதோ ஒரு கருத்தை சொல்லியதாக அதிமுக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். அது சம்பந்தமான எந்த விதமான சம்மனும் எனக்கு இதுவரை எனது சென்னை அலுவலகத்திற்கோ அல்லது முகாம் அலுவலகத்திற்கு வரவில்லை. அனைத்து உதவியாளர்களிடமும் இது பற்றி விசாரித்து விட்டேன் என்றாலும் பத்திரிகை செய்திகளின் வாயிலாக நான் நீதிமன்ற சம்மனை மறுத்து திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்பட்டிருக்கிறது. உண்மையில் எங்கள் கவனத்திற்கு வந்து அது மறுக்கப்படவில்லை, அது 100% உண்மை. எந்த தபால் வந்தாலும் நான் ஒரு போதும் அதை வாங்க மறுப்பதில்லை. அதுவும் நீதிமன்றத்தில் இருந்து வந்துள்ளது என்றால் உடனே வாங்குபவன். நான் நீதிமன்றத்தை மதிக்கக் கூடியவன், சம்மன் வரவில்லை என்பதே உண்மை, என் வழக்கறிஞர் ஆலோசனைப்படி வருகிற 13-ஆம் தேதி நீதிமன்ற சம்மன் வந்தாலும், வராவிட்டாலும் நான் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவேன் என தெரிவித்துள்ளா ர்.