நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது அனவன் குடியிருப்பு பகுதி. இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் பல குடும்பங்கள் அங்கு விவசாய தொழில் செய்து வருகின்றனர். இந்த சூழலில் மலையடிவார பகுதி என்பதால் அடிக்கடி காட்டுபன்றி, சிறுத்தை,யானை, கரடி போன்ற வனவிலங்குகள் இரவு நேரங்களில் இந்த குடியிருப்பு பகுதிக்கு நோக்கி வருவது வழக்கம். அதோடு யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்திப்பதாக தொடர்ச்சியாக கவலை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று முன் தினம் பொட்டல் என்னும் கிராமத்தில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி சென்றது. சுமார் 1200 ஏக்கர் விவசாய நிலங்களை சேதப்படுத்தியதால் ஏக்கருக்கு 20 முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்து பயனின்றி யானைகள் அழித்து விட்டதாக வருத்தம் தெரிவித்ததோடு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இது ஒருபுறமிருக்க விலங்குகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கி அச்சுறுத்தி வருகின்றது. குறிப்பாக நேற்றிரவு அனவன்குடியிருப்பு பகுதியில் மாரியப்பன் என்பவரது வீட்டில் வளர்த்து வரும் 2 வயது மதிக்கத்தக்க கன்று குட்டியை சிறுத்தை கன்றுகுட்டியின் கழுத்து, வாய் பகுதியில் தாக்கி உள்ளது. கன்றுகுட்டியின் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்த்த போது சிறுத்தை நின்றுள்ளது. உடனே கூச்சலிட்டு அதனை விரட்டியடித்துள்ளனர். மேலும் உடனடியாக வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், ”கடந்த சில ஆண்டுகளாகவே வனவிலங்குகள் அதிக அளவில் குடியிருப்பு பகுதியில் வந்து விளைநிலங்களை சேதப்படுத்தியும்,காட்டு பகுதியில் மேச்சலுக்கு செல்லும் கால்நடைகள் பிடித்து சென்று வருகிறது.. தற்போது குடியிருப்பு பகுதியில் நுழைந்து கன்றுகுட்டியை தாக்கி உள்ளது. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வர இங்குள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். உடனடியாக ஊருக்குள் புகுந்த இந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும் அதோடு வன விலங்குகள் ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.