இந்தியாவின் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மற்றொரு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது.
காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாக இருக்க வேண்டும். நிலையான காலநிலையும், நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில் நிலவியல் ரீதியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக கண்டறியப்பட்டது. குலசேகரன்பட்டினம் நிலநடுக்கோட்டில் இருந்து 8.364 டிகிரி வடக்கே அமைந்து உள்ளது. குலசேகரன்பட்டினத்தில் இருந்து 90 டிகிரி தெற்கு நோக்கி ராக்கெட்டுகளை ஏவ முடியும்.
இதைத் தொடர்ந்து குலசேகரன்பட்டினம் அருகே 2 ஆயிரத்து 376 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. குலசேகரன்பட்டினம் அருகே கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. சிறப்பு வருவாய் அலுவலர் தலைமையில் 8 தாசில்தார்கள் தலைமையில் கையகப்படுத்தும் பணி நடந்தது. இதில் 141 ஏக்கர் புறம்போக்கு நிலமும், மீதம் உள்ள பட்டா நிலமும் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள பகுதியை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடிக்கு வந்தார்.
பின்னர் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மைய விஞ்ஞானிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் குலசேகரன்பட்டினம் கூடல்நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். எந்த பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைய வேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.
பின்னர் இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறும் போது, ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்தபடியாக 2-வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரபட்டினம் அமைந்து உள்ளது. குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு மிகவும் சிறந்த இடமாக உள்ளது. இங்கு ஆய்வு மேற்கொண்டதில் முழு திருப்தியாக உள்ளது. இங்கு இருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை சிறப்பாக விண்ணில் செலுத்த முடியும். தெற்கு நோக்கிய ஏவுதலுக்கு சிறந்த இடமாக உள்ளது. 100 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அரசிடம் இருந்து சில அனுமதியும், பாதுகாப்பு அனுமதியும் பெற வேண்டி உள்ளது. நாங்கள் ஏவுதளம் அமைப்பதற்கு தயாராக உள்ளோம்.
உடனடியாக கட்டுமான பணிகள் தொடங்கப்படும். ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து குடியிருப்புகள் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து குடியிருப்புகள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆகையால் சிறிய வகை ராக்கெட்டுகளான எஸ்.எஸ்.எல்.வி. விண்ணில் செலுத்துவதற்கு உகந்ததாக உள்ளது. வருகிற செப்டம்பர் மாதத்தில் அடுத்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்றார்.