கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டை விற்ற கடைக்காருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

 

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் காஜா ரமேஷ் ராஜா. இவர் நாகர்கோவில் கே.பி.ரோட்டில் உள்ள ஒரு கடையில் ரூ.145 கொடுத்து சுகர்கிராக்கர் என்ற பிஸ்கெட் பாக்கெட் வாங்கினார். இதை சாப்பிட்ட காஜா ரமேஷ் ராஜாவின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே பிஸ்கெட் பாக்கெட்டின் தயாரிப்பு தேதியை அவர் பார்த்தபோது அது காலாவதியாகியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காஜா ரமேஷ் ராஜா வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். அதன் பிறகும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

 



 

 

வழக்கை குமரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் கடைக்காரரின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட காஜா ரமேஷ் ராஜாவுக்கு நஷ்ட ஈடாகவும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.13 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட கடைக்காரர் வழங்க வேண்டும் உத்தரவிடப்பட்டது. மாறி வரும் உலகில் நம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும் , வேகமாக சுழலும் வாழ்க்கை சக்கரத்தில் நிதானமும் பொறுமையும் மிக முக்கியம் கடைகளில் பொருட்கள் வாங்கும் நாம் கண்டிப்பாக அந்த பொருளின் தரத்தையும் அதனை தயாரித்த தேதியையும் பார்த்து வாங்க வேண்டும் என்பதே நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் வேண்டுகோளாக உள்ளது.

 

 



 


சின்னமுட்டம் மீன்பிடித்துறை முகத்தில் அத்துமீறி நுழைந்து புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கிய 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 



 

தமிழகத்தில் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் குமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை சுமார் 52 மீனவ கிராமங்கள் உள்ளன இங்கு சின்னமுட்டம், குளச்சல், தேங்காய்பட்டனம் என 3 பெரிய மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இந்த துறைமுகங்களை தங்கு தளமாக கொண்டு சுமார் 2000 விசை படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 350 விசை படகுகள் தினமும் அதிகாலை மீன்பிடிக்க சென்று விட்டு இரவு துறைமுகம் வருவது வழக்கம். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மழை மற்றும் புயல் வீச வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன் வளத்துறை தடை விதித்திருந்தது.

 



 

 

 

மேலும், மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகம் மூலம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்ததுடன், புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் 12 பேர் கொண்ட கும்பல் நேற்று மீன்பிடி துறைமுகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அவர்கள் அங்கிருந்த காவலாளிகளை அப்புறப்படுத்தி விட்டு புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கினர். மேலும், அங்குள்ள பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் 12 பேர் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.