சிவகாசியில் அழிந்து வரும் சிட்டுக்குருவிகளுக்கு வருவாயில் பெரும்பகுதியை ஒதுக்கி பறவைகளை பாதுகாத்து வரும் குடும்பத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.




சிவகாசி ஓம் சேர்மா நகரை சேர்ந்தவர் அச்சக உரிமையாளர் நித்திய பாண்டி. கூட்டுக் குடும்பத்துடன் வசித்து வரும் இவரது வீட்டைச் சுற்றிலும் மரங்களும், செடி, கொடிகளும் ஏராளமாக உள்ளன. இந்நிலையில், குடும்பத்தினர் தங்களது வீட்டில் வளர்த்து வரும் லவ் பேர்ட்ஸ்ற்கு அன்றாடம் உணவாக தினையை வைப்பது வழக்கம்.




அவைகள் உணவருந்திய பின்பு தரையில் சிதறி கிடக்கும் தினையை சிட்டுக்குருவிகள் இரையாக உண்பதை வழக்கமாக கொண்டிருந்தன. இதில் முந்திக் கொள்ளும் சிட்டுக்குருவிகளுக்கு மட்டுமே தரையில் சிதறிய தினை உணவாகக் கிடைத்த நிலையில், மற்ற சிட்டுக்குருவிகளுக்கு தினை உணவு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் பட்டினியால் திரும்பிச் சென்றன. இதனால் மன வருத்தமடைந்த இவர்கள் பறவைகளுக்கென உணவு செலுத்தும் பிரத்யேக குடுவையை தயார் செய்து சிந்தாமல்- சிதறாமல் தினை போன்ற உணவு வகைகளை கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி அழிந்து வரும் சிட்டுக்குருவி உள்ளிட்ட பல்வேறு பறவைகளை பாதுகாத்து வருகின்றனர்.




கூட்டம், கூட்டமாக பறந்து வரும் அழிந்து வரும் இனங்கள் என்று கூறப்படும் சிட்டுக்குருவிகளும், மற்றுமுள்ள பல்வேறு பறவைகளும் தினை உணவு இருக்கும் இடத்தை கண்டு காலை முதல் மாலை வரை கூட்டம் கூட்டமாக சிறகடித்து பறந்து வந்து இரை எடுத்துச் செல்லும் காட்சி மிகவும் ரம்மியமாக உள்ளது. இக்காட்சி இவர்களது இல்ல நிகழ்ச்சிக்கு அவரது உறவினர்கள் கூட்டம், கூட்டமாக விருந்திற்கு வந்து செல்வது போல வந்து செல்கிறது.




தொடக்கத்தில் 200 கிராம் எடை கொண்ட அளவிலேயே திணைகள் பறவை இனங்களுக்கு உணவாக அளிக்கப்பட்டு வந்த நிலையில், வளர்ச்சியடைந்த உணவகம் போல, வாடிக்கையாளர்களான சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகள் ஆயிரக்கணக்கில் எண்ணிக்கை கூடியதால், தற்போது படிப்படியாக, தினையின் எடை அளவு அதிகரித்து தற்போது 10 கிலோ வரை திணைகள் தினந்தோறும் பறவைகளுக்கு உணவாக கொடுக்கப்படுகிறது.




குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வெளியூர் செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டால் கூட பறவைகளுக்கு உணவளிக்க தவறுவதில்லை. நாள்தோறும் 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை சிட்டுக்குருவிகளுக்காக செலவிட்டாலும் அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் பறவைகளுக்கு உணவளித்து அதனை பாதுகாப்பதில் தங்கள் குடும்பமே மன நிம்மதியடைவதாகவும் கூறும் இவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் நாள்தோறும் உணவளிப்பதை இடைவிடாமல் அடுத்ததடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ள நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பறவைகளை பாதுகாப்பதில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களின் பங்களிப்பை அளித்து வரும் இக்குடும்பத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.