தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், உதவி ஆட்சியர் கவுரவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அப்போது, தாமிரபரணி ஆற்றில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி, விவசாயிகளிடம் தவறான தகவலை தெரிவித்து மருதூர் அணைக்கட்டில் இருந்து குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தண்ணீரை திறந்துவிட்டு உள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2021- 2022, 2022- 2023-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடி புகாரால் முடக்கப்பட்டுள்ள குரும்பூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் சிக்கியுள்ள விவசாயிகளின் நகைகள் மற்றும் முதலீடுகளை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் இன்றி வாழைகள் கருகி விட்டன. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். உடன்குடி பகுதியில் கூடுதலாக கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசும் போது, இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றில் சீவலப்பேரி, வல்லநாடு, பொன்னன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், குரங்கணி, வாழவல்லான் உள்ளிட்ட இடங்களில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு இந்த உறைகிணறுகளுக்கு கூட தண்ணீர் வராத அளவுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே, உறைகிணறு பகுதிகளில் பொக்லைன் மூலம் கால்வாய் தோண்டி தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறோம். இந்த நிலைமையை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். தண்ணீரை வைத்துக் கொண்டு இல்லை என கூறவில்லை. சில தவறுகள் நடந்திருக்கலாம். எதிர்காலத்தில் அதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய சூழ்நிலையில் நீர் மேலாண்மை தான் முக்கியம். தற்போது ஏற்பட்டுள்ள அனுபவத்தை கொண்டு வரும் காலங்களில் நீர்மேலாண்மையை சிறப்பாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நீர் மேலாண்மை திட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை முதல்கட்டமாக ஸ்பிக் நிறுவனத்துக்கு வழங்கி வருகிறோம். அனல்மின் நிலையத்துக்கும் அந்த தண்ணீரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முழு அளவில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு மற்ற தொழிற்சாலைகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், டிசிடபிள்யூ நிறுவனத்துக்கு திருச்செந்தூர் நகராட்சியில் கழிவுநீரை சுத்திகரித்து வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதேபோன்று அனைத்து உள்ளாட்சிகளிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பது குறையும். எனவே, விவசாயத்துக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும். குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் தொடர்பாக விசாரணை முடிந்ததும் வேறு வங்கிகளில் மோசடியாக அடமானம் வைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நகைகளை கூட்டுறவு வங்கி சார்பில் மீட்டு விவசாயிகளிடம் வழங்கப்படும். அதுபோல விவசாயிகளில் முதலீடுகளை திரும்ப வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். விரைவில் மழை வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.
உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். அப்போது ஆட்சியர் அது தொடர்பாக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். ஆனாலும் விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்ததால், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை மூடிவிடுங்கள், அந்த மக்களுக்கு கூட்டுறவு சங்கம் தேவையில்லை என்று ஆவேசமாக கூறினார். இதனால் கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.