தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் குற்றாலநாதர் கோயில் நிர்வாகத்தின் கீழ் இருந்த கடைகள்  ஏலம் விடப்பட்டு சுமார் 40 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கடைகள் அனைத்தும் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டு தீக்கிரையானது.  இந்த நிலையில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அமைக்கப்பட்டிருந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக பல தரப்பினரும் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் ஐய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். இதனையொட்டி அதே இடத்தில் மீண்டும் கடைகள் அமைக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வந்தது.


இந்த தீ விபத்தால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அதற்கு கோவில் நிர்வாகம் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் குற்றாலம் கோயில் நிர்வாகம் அந்த கடைகளை மறு ஏலம் விடுவதை தடை செய்யவேண்டும் என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த சூழலில் இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையின்போது கடை ஏலத்தை நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


மேலும், குற்றாலம் குற்றாலநாதர் கோயிலுக்கு உட்பட்ட பகுதியில் தீ விபத்துக்கு உள்ளான சம்பவ இடத்தில் மூத்த வழக்கறிஞர் வெங்கட்ரமணா மற்றும் அருண்சுவாமிநாதன் ஆகிய இருவரையும் நீதிமன்ற ஆணையராக நியமித்து நீதிபதி இருவரும் நேரில் சென்று ஆய்வு நடத்தி இது தொடர்பான அறிக்கையை  தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.




அதன் அடிப்படையில், மூத்த வழக்கறிஞர் டி எஸ் ஆர் வெங்கட்ரமணா மற்றும் அருண்சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய குழு  நேற்று குற்றாலத்தில் தீ விபத்து நடந்த இடத்தில்   நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வரும் 17-ஆம் தேதி இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நடக்க இருப்பதால் அதற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக ஆணையர்கள் தெரிவித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட விசாரணையில் தீர்ப்பு இருக்கும் எனவும் தெரிய வருகிறது. இந்த ஆய்வின்போது, குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயில் உதவி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர், தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.