நெல்லை டவுண்  பகுதியில் சாப்டர் ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பள்ளி இடைவேளை விட்ட நேரத்தில் மாணவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக கழிவறை அருகே வந்துள்ளனர் கழிவறையின் முகப்புப் பகுதியில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப் பட்டுள்ளது. மாணவர்கள் கூட்டமாக வந்த நிலையில் ஒருவர் பின் ஒருவராக சென்றபோது எதிர்பாராதவிதமாக தடுப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது, இந்த இடிபாடுகளில் சிக்கி எட்டாம் வகுப்பு பயிலும் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த  விஸ்வரஞ்சன் என்ற மாணவனும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் டவுண் பாட்டப்பத்து பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்ற மாணவனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய 2 மாணவர்கள் உடல்களை மீட்டு உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  டவுண் அருகே உள்ள பழவூர் பகுதியைச் சேர்ந்த சுதீஸ் என்ற மாணவனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



 


இந்த விபத்தில் சஞ்சய், இசக்கிபிரகாஷ், சேக்அபுபக்கர்சித்திக் மற்றும் அப்துல்லா ஆகிய  4 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் நேரில் பார்த்து ஆறுதல் கூறியதுடன் முதற்கட்டமாக சட்டமன்ற உறுப்பினர் நிவாரண உதவியும் வழங்கினார் . மேலும் காயம் அடைந்த மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர் . 




   
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டவுண்  சாப்டர் பள்ளியில்  இடைவேளை விட்ட நேரத்தில்  மாணவர்கள் சிறுநீர் கழிக்க சென்றபோது கழிப்பிட சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில்  3 மாணவர்கள் உயிரிழந்தனர் , 4 மாணவர்கள் சிகிச்சையில் உள்ளானர். அவர்கள் உடல்நலம் நன்றக உள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்த விபத்திற்கு சுற்றுச்சுவர் அடித்தளம் அமைக்காமல் கட்டப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  சிறப்புக்குழு அமைத்து நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார் .




இதனிடையே பள்ளிகட்டடிடம் இடிந்து விழுந்த விபத்து குறித்து நெல்லை வருவாய் ஆய்வாளர் மாரித்துரை புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை ஞானசெல்வியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும்  பள்ளி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3  மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தலைமை மருத்துவர் செல்வ முருகன் முன்னிலையில் பிரேத பரிசோதனையானது செய்யப்பட உள்ளது




இந்த விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாயும், காயமடைந்த 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 இலட்சம் ரூபாயும் உடனடியாக வழங்க ஆணை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்துயர சம்பவம் குறித்து மிகவும் வேதனை அடைந்ததாகவும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.


இந்த உத்தரவை தொடர்ந்து உயிர் இழந்த 3  மாணவர்களின்  உடல்களுக்கு  மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர், போக்குவரத்துத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்  பிரேத பரிசோதனை  அறையில்   மரணமடைந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு காயமடைந்து சிகிச்சை பெற்று வரும்  மாணவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்த பின்னர் முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்க உள்ளனர்.