நெல்லை மாவட்டம் திருப்பணி கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் சுடலை முத்து. இவரது மகன் பண்டாரம். விவசாயியான பண்டாரம் கடந்த 19.05.19 அன்று நிலத்தில் பயிரிடுவதற்காக வெண்டைக்காய் விதை வாங்கியுள்ளார். ஒரு பாக்கெட் வெண்டைக்காய் விலை ரூ 821 விகிதம் மொத்தம் 4 பாக்கெட் ரூ 3284 கொடுத்து வாங்கி உள்ளார். அப்போது கடைக்காரர் நல்ல விதை என்றும் ஒரு ஏக்கர் பயிரிட்டால் 16000 கிலோ வெண்டைக்காய் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அதனை நம்பி பண்டாரம் வாங்கிய விதையினை நிலத்தில் பயிரிட்டுள்ளார். உழவுச்செலவு மற்றும் வெண்டைக்காய் வளர்வதற்கு மருந்து உரம் என அதிகமாக செலவு செய்து வெண்டைக்காயை பராமரித்து வந்துள்ளார். ஆனால் வெண்டைக்காய் சரியாக காய்க்காமல் வடு மாங்காய் போன்று காய் காய்த்துள்ளது.
மேலும் வெண்டைக்காயை உடைத்து பார்த்தால் உள்ளே எந்த விதமான விதைகளும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் வெண்டைக்காயை மார்க்கெட்டில் விற்பனை செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இது குறித்து விதை விற்பனை செய்த கடைக்காரரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வந்து பார்த்து விட்டு இலவசமாக 5 பாக்கெட் விதை தருவதாக கூறியுள்ளார். ஆனால் பண்டாரம் 73 ஆயிரம் செலவு செய்த நிலையில் கடைக்காரரின் அலட்சியமான பதிலால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
மேலும் விதை உற்பத்தி செய்த நிறுவனம் சரியான, தரமான விதை விற்பனை செய்யாமல் தரமற்ற விதையினை விற்பனை செய்ததால் வெண்டைக்காய் மகசூல் சரியாக கிடைக்காமல் வெண்டைக்காவின் விளைச்சலும் குறைவாக இருந்து வெண்டைக்காய் வடுமாங்காய் போன்று காய்த்துள்ளது. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பண்டாரம் வழக்கறிஞர் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கினை விசாரணை செய்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் கிளாஸ்ட்சன் பிளஸ்டு தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் தரமற்ற வெண்டைக்காய் விதை உற்பத்தி செய்த நிறுவனம் பண்டாரத்திற்கு நஷ்ட ஈடாக ரூபாய் 80,000 ரூபாயும், வழக்கு செலவு 5000 ரூபாயும் சேர்த்து 85 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இதனை ஒரு மாத காலத்திற்குள் வழங்க தவறினால் 9 % வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்